தருமபுரி: ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, ஒகேனக்கல்லில் நேற்று சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித் திருந்தது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்துக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் ஆண்டு முழுவதும் வருகை தருவது வழக்கம். அதே நேரம் விடுமுறை நாட்களில் பயணிகள் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.
கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது, சீரான நீர்வரத்தை தொடர்ந்து பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை மற்றும் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, ஒகேனக்கல்லுக்கு நேற்று முன் தினம் இரவு முதலே பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது.
இதனால், அரசு மற்றும் தனியார் தங்கும் விடுதிகளில் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. நேற்று அதிகாலை முதலே அருவிகளில் குளிக்க பயணிகள் திரண்டனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் நீண்ட நேரம் காத்திருந்து குளிக்கும் நிலை ஏற்பட்டது.
பரிசல் பயணம்: இதேபோல, பரிசல்கள் இடைவிடாமல் இயங்கின. மேலும், முதலைப் பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை பயணிகள் சுற்றிப் பார்த்து பொழுதை கழித்தனர். ஒகேனக்கல்லுக்கு பயணிகள் வந்த கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் தருமபுரி - ஒகேனக்கல் சாலையில் சின்னாறு நீர் அளவீட்டு மையம் அருகே நிறுத்தப்பட்டன.
இதேபோல, வாகனங்கள் அதிகரித்ததால் நெரிசலை தவிர்க்க ஒகேனக்கல்-ஊட்டமலை செல்லும் சாலையில் வாகனப் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. கடைகள், உணவகங்களில் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது. குறிப்பாக, மீன் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பிற்பகலில் வந்த பயணிகளுக்கு உணவகங்களில் மீன் உள்ளிட்ட அசைவ உணவுகள் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டது.
பயணிகள் வருகை களைகட்டியதால், பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், பெண் சமையல் தொழிலாளர்கள் உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதையொட்டி, பென்னாகரம் டிஎஸ்பி, 5 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீஸார் ஆலம்பாடி, மணல் திட்டு, பிரதான அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
கடைகள், உணவகங்களில் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது. குறிப்பாக,மீன் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பிற்பகலில் வந்த பயணிகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது.