ஏலகிரி பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்றை பார்வையிட்டு நேற்று ஆய்வு செய்த சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன். அருகில், சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உள்ளிட்டோர். 
சுற்றுலா

ஏலகிரிமலை அத்தனாவூரில் 7 ஏக்கரில் அமையும் சாகச சுற்றுலா தலம்

செய்திப்பிரிவு

திருப்பத்தூர்: ஏலகிரி மலையில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவிலான சாசக சுற்றுலாத்தலம் அமைப்பதற்கான திட்டத்துக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அடிக்கல் நாட்டினார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் உள்ள அத்தனாவூர் கிராமத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் 7.09 ஏக்கர் பரப்பளவிலான சாகச சுற்றுலா தளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆகியோர் தலைமை தாங்கினர். ஜோலார்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் தேவராஜி முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் புதிய திட்டத்துக்கான அடிக்கல் நாட்டினார்.

பின்னர் அமைச்சர் மதிவேந்தன், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ஏலகிரி மலையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் மூலம் சுற்றுச்சூழல் தளம் கொண்டுவர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 3 ஏக்கர் பரப்பளவில் சுற்றுச்சூழல் முகாம், சுற்றுச்சூழல் டென்ட் வரவுள்ளது. தற்போதைய மக்கள் அதிகளவில் மலைகளை பார்த்தபடி இயற்கையோடு ஒன்றிணைந்து இருக்க விரும்புகின்றனர். அதனடிப்படையில் சுற்றுலாத்துறையின் மூலம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் 10 முதல் 15 டென்ட்கள் 6 ஏக்கர் பரப்பளவில் சுற்றுச்சூழல் தளம் மற்றும் வெவ்வேறு சாகச சுற்றுலாக்கள் அந்த சுற்றுச்சூழல் தளத்தில் வரவுள்ளது. இதுவரை இல்லாத வகையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் சுற்றுலாத் தல மேம்பாட்டு திட்டம் கொண்டுவரப்பட்டு அதன் ஒரு பகுதியாக ஏலகிரியில் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது.

ஏலகிரி மலை சிறந்த சுற்றுலாத்தலம் மற்றும் நிறைய சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏலகிரி மலையில் பூங்கா, படகு சவாரிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தோம். மலைக்கு வரும் நெடுஞ்சாலைகளை சீர் செய்வதற்கு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்து நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 1500-க்கும் மேற்பட்ட சுற்றுலாத்தலங்கள் உள்ளன. இதில், 300 இடங்களை தேர்வு செய்து அவற்றுக்கான மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு ஆண்டுக்கு 10 முதல் 15 இடங்களை தமிழ்நாடு அரசு நிதியின் மூலம் புதுவகையான சுற்றுலா மேம்பாட்டினை கொண்டுவரவுள்ளோம்.

திருவண்ணாமலை மாவட்டத் தில் ஜவ்வாதுமலை, நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை, ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறப்பன் வலசை, கன்னியாகுமரி மாவட்டத்தில் சித்தாறு, தென்காசி மாவட்டத்தில் குண்டார் அணை, சென்னையில் உள்ள கொலவாய் ஏரி, பூண்டி ஏரி போன்ற இடங்கள் மேம்படுத்தப்படவுள்ளன. சுற்றுலா சாகச தலங்கள் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படவுள்ளது’’ என்றார். அப்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சூரியகுமார், மாவட்ட பால்வள தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT