சுற்றுலா

10 நாட்களில் 2 லட்சம் பயணிகள் வருகை: குமரியில் களைகட்டிய சுற்றுலா வர்த்தகம்

செய்திப்பிரிவு

நாகர்கோவில்: சபரிமலை சீஸன் தொடங்கிய 10 நாட்களில் கன்னியாகுமரிக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் வந்துள்ளனர். இதனால் சிறு வியாபாரம் முதல் அனைத்து வகை வர்த்தகமும் களைகட்டியுள்ளது.

கன்னியாகுமரியில் இரு ஆண்டுகளுக்கு பின்னர் சபரிமலை சீஸன் கடந்த 17-ம் தேதி தொடங்கியது. அதுமுதல் அங்கு ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. வார இறுதிநாட்களில் சுற்றுலா பயணிகளும் ஏராளமானோர் வருகை புரிகின்றனர். இதனால் கன்னியாகுமரியில் சிறு வியாபாரம் முதல் அனைத்து வகை வர்த்தகமும் பரபரப்பாக நடந்து வருகிறது. அங்குள்ள ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக சனி, ஞாயிறு தினங்களில் அடுத்த மாதம் முழுவதும் முக்கிய தங்கும் விடுதிகளில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு நிரம்பியுள்ளது.

விவேகானந்தர் பாறைக்கு மட்டும் படகு போக்குவரத்து நடைபெறும் நிலையில் தினமும் சராசரியாக 7 ஆயிரம் பேர் முதல் 8 ஆயிரம் பேருக்கு மேல் படகு சவாரி மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு படகு போக்குவரத்து தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், படகு போக்குவரத்து எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை. ஜனவரி வரையுள்ள இந்த சீஸனில் அதிகமானோர் வருவார்கள் என்பதால், டிசம்பர் மாதத்துக்குள் வட்டக்கோட்டைக்கு படகு சவாரி தொடங்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 17-ம் தேதியில் இருந்து இதுவரை 10 நாட்களில் கன்னியாகுமரிக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள், மற்றும் ஐயப்ப பக்தர்கள் வந்துள்ளனர். சபரிமலையில் மண்டல பூஜை முடிந்து மகரவிளக்கு காலத்தின் போது கன்னியாகுமரியில் மேலும் கூட்டம் அதிகரிக்கும். விவேகானந்தர் பாறைக்கு படகு மூலம் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்று பார்வையிட்டுள்ளனர்.

திற்பரப்பு அருவி, வட்டக்கோட்டை, மாத்தூர் தொட்டிப்பாலம், உதயகிரி கோட்டை உட்பட குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்கள் அனைத் திலும் கூட்டம் அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று திற்பரப்பு அருவி யில் கூட்டம் அலைமோதியது. அருவியில் மிதமாக கொட்டிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.

SCROLL FOR NEXT