சுற்றுலா

வண்டியூர் கண்மாயில் ரூ.99 கோடியில் உருவாகும் ‘டூரிஸ்ட் ஸ்பாட்’ திட்டம்: ஈர்க்கும் மாதிரி வரைபடங்கள்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை வண்டியூர் கண்மாயில் ரூ.99 கோடியில் மாநகராட்சி உருவாக்கும் ‘டூரிஸ்ட் ஸ்பாட்’ திட்டத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியாகி பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

மதுரையில் திரையரங்குகளை விட்டால், பொதுமக்களுக்கு வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை.

அதனால், வண்டியூர் கண்மாயை மதுரை மக்களுக்கான சிறந்த பொழுதுபோக்கு இடமாக மாற்ற மாநகராட்சி நிர்வாகம், ரூ.99 கோடியில் ‘டூரிஸ்ட் ஸ்பாட்’ திட்டத்தை மாநில அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளது.

450 ஏக்கரில் அமைந்துள்ள வண்டியூர் கண்மாயில் தற்போது கண்ணுக்கு எட்டிய தொலைவுவரை ஆண்டு முழுவதும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

அதனால், இந்த சுற்றுலாத் திட்டம் திட்டமிட்டபடி நிறைவேற்றப்பட்டால் எதிர்கால தலைமுறையினருக்கு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

மதுரையில் மாரியம்மன் தெப்பக்குளத்தில் மட்டுமே தற்போது படகு சவாரி உள்ளது. அதுபோல், வண்டியூர் கண்மாயிலும் இந்த சுற்றுலாத் திட்டத்தில் படகு சவாரி விடப்பட உள்ளது.

கண்மாயைச் சுற்றிலும் 7 கி.மீ. நடைபாதை உருவாக்கப்படுகிறது. கண்மாயின் மையத்தில் அழகான சிறிய தீவு உருவாக்கப்படுகிறது. அந்த தீவுக்கு பொதுமக்கள் மரப்பாலம் வழியாக கண்மாயின் அழகை ரசித்தபடியே நடந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட உள்ளது. பெரியவர்கள் மரப்பாலத்தில் ஆங்காங்கே அமர்ந்து இளைப்பாற இருக்கைகள் அமைக்கப்படுகின்றன.

தமிழன்னை சிலை: கண்மாயை ரசிக்க வரும் குழந்தைகள், பெரியவர்களுக்கு உணவருந்த சிற்றுண்டி கடைகள் அமைக்கப்படுகின்றன. கண்மாயின் மையத்தில் தமிழன்னை சிலை அமைக்கப்படுகிறது. கண்மாய்க் கரை பகுதியில் இரவை அழகாக்க இசை நீரூற்றும் அமைகிறது.

இறுதி செய்யும் பணி: பிரம்மாண்டமாக உருவாகும் இந்த சுற்றுலாத் திட்டத்தை மதுரை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘டூரிஸ்ட் ஸ்பாட் திட்டம் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதன் வரைபடங்களை இறுதி செய்யும் பணி நடக்கிறது."என்றனர். தற்போது‘டூரிஸ்ட் ஸ்பாட்’டாக மாறப்போகும் வண்டியூர்கண்மாயின் வரைபடம் மக்களை கவர்ந்துள்ளது.

SCROLL FOR NEXT