சுற்றுலா

வண்டலூர் பூங்காவில் நீர்வாழ் உயிரின காட்சி சாலை: பொதுமக்கள் பார்வையிட அனுமதி

செய்திப்பிரிவு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக புதிதாக நீர்வாழ் உயிரின காட்சி சாலை நேற்று திறக்கப்பட்டது.

வண்டலூர் பூங்காவில் 180 வகையான இனங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 500 வன உயிரினங்கள் பராமரிக்கப்படுகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு முக்கிய பொழுதுபோக்கு இடமாகவும் இது திகழ்கிறது.

தினமும் வார நாட்களில் சுமார்4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களும், விடுமுறை நாட்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர். இப்பூங்காவில் ஏற்கெனவே யானை, சிங்கம், புலி, மான்கள், பாம்புகள், பறவை இனங்கள் உள்ளிட்டவை பராமரிக்கப்பட்டு வருகின்றன.

நவீன தொழில்நுட்பங்களை புகுத்திபார்வையாளர்களை கவரும் வகையில் பல்வேறு புதிய அம்சங்களை வண்டலூர் பூங்கா நிர்வாகம் கொண்டுவந்தவண்ணம் உள்ளது. சிசிடிவி கேமராக்களை பொருத்தி, நேரலையாக பொதுமக்கள் 24 மணி நேரமும் விலங்குகளை பார்வையிடும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக வெளி நாடுகளில் இருப்பது போன்று நீர்வாழ் உயிரின காட்சி சாலையை அமைக்க பூங்கா நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. அதன்படி பூங்காவின் சொந்த வருவாய் நிதியில் இருந்து ரூ.23 லட்சம் செலவில் நீர்வாழ் உயிரின காட்சி சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதை பார்வையிட பொதுமக்கள் நேற்று முதல் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதைபார்வையிட தனி கட்டணம் எதுவும்செலுத்த தேவையில்லை. வெளிப்புறத்தில் மீன் போல் அமைக்கப்பட்டுள்ள அரங்குக்குள், சுவர்களில் புதைக்கப்பட்ட கண்ணாடி தொட்டிகளில் 28 வகையான அலங்கார மீன் இனங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த புதிய வசதி பார்வையாளர்களையும், குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

SCROLL FOR NEXT