டெல்லி: இந்தியாவிலேயே சிறந்த மலைகள் மற்றும் மலைக் காட்சிகள் (Mountain and Hill Views) இடத்திற்கான அவுட்லுக் டிராவலர் விருதை தமிழ்நாடு வென்றுள்ளது.
அவுட்லுக் டிராவலர் விருதுகள் 2022-ல், இந்தியாவின் சிறந்த மலைகள் மற்றும் மலைக்காட்சிகளுக்கான இடத்திற்கான வெள்ளி விருதை தமிழ்நாட்டின் நீலகிரி மற்றும் குன்னூர் வென்றுள்ளது. தமிழ்நாட்டிற்கான வெள்ளி விருதினை, மத்திய சுற்றுலா, கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி வழங்கினார்.
அவுட்லுக் விருதுகள் பயண மற்றும் சுற்றுலாத் துறையில் தரத்தின் அளவுகோலைக் குறிக்கின்றன. தொழில்துறையின் 360 டிகிரி பார்வையை நோக்கமாகக் கொண்டுள்ளன. பல ஆண்டுகளாக, இந்த விருதுகள் சுற்றுலா தொழில் முனைவோர்களை பல்வேறு கோணங்களில் ஈர்த்துள்ளது. கரோனா நோய் பரவலுக்குப்பின் சுற்றுலா தொழில் சார்ந்த துறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை முன்னிலைப்படுத்துவதில் இந்த ஆண்டு முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
சிறந்த சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலம், சிறந்த வனவிலங்குத் தலம், சிறந்த சாகசத் தலம் மற்றும் சிறந்த விழாத் தலம் உள்ளிட்ட 11 வெவ்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இந்திய சுற்றுலாத் துறையைச் சேர்ந்த முக்கியப் நபர்களைக் கொண்டு விருதுகள் மதிப்பீடு செய்யப்பட்டன. இந்த நிகழ்வில் சுற்றுலாத்துறையில் ஸ்டார்ட் அப்கள் மற்றும் இலக்குகளை சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துதல் தொடர்பான குழு விவாதங்களும் நடைபெற்றன.