சுற்றுலா

தென்கரைக்கோட்டையில் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையை சீரமைத்து சுற்றுலாத் தலமாக்க கோரிக்கை

செய்திப்பிரிவு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தென்கரைக்கோட்டை மற்றும் அருகில் உள்ள கோயில்களை சீரமைத்து சுற்றுலாத் தலமாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் தென்கரைக்கோட்டையில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த தென்கரைக் கோட்டை. கோட்டை என்றாலே உயர்ந்த மலைப்பகுதிகளில் அமைக்கப்பட்டு இருப்பது வழக்கம். ஆனால், இங்கு தரைப்பகுதியில் அமைந்துள்ளது.

இங்கு, கிபி 16-ம் நூற்றாண்டில் 1509- 1529 ஆண்டு காலத்தில் கிருஷ்ண தேவராயரால் சுமார் 40 ஏக்கரில் கோட்டையும், கோயில்களும் கட்டப்பட்டன. 1652-ம் ஆண்டு பிஜப்பூர் சுல்தான் வசம் இருந்தது. 1968-ல் ஹைதர் அலியின் ஆட்சிக்கு உட்பட்டு திப்பு, மன்ரோ காலத்தில் முக்கிய நகரமாக திகழ்ந்தது.

> ஜலகண்டேஸ்வரர் நதியின் தென்கரையில் கோட்டை அமைந்துள்ளதால் இதற்கு தென்கரை கோட்டை என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. கோட்டைக்கு அருகில் ராமர் கோயில் அமைந்துள்ளது.

தகடூர் என்னும் தருமபுரி மாவட்டத்தில் மொரப்பூர் மையத்தில் தலவரி வசூல் செய்வதற்காக குறுநில மன்னர் சீலப்ப நாயக்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஜலகண் டேஸ்வரர் ஆற்றின் அருகே ஓய்வு எடுத்துள்ளார். அப்போது சீலப்ப நாயக்கரின் கனவில் திருமண கோலத்தில் ராமர் சீதையுடன் காட்சி அளித்ததால், அவர் தென்கரைக்கோட்டை பகுதியில் கோயில் நிறுவியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.

கோட்டை வளாகத்தில்  கல்யாண ராமர் கோயிலும் அதன் வடப்புறத்தில் நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம், அம்மன் சன்னதி, ஆஞ்சநேயர், முருகர் சன்னதிகள் உள்ளன. சைவ ,வைணவ கோயில்கள் ஒன்றாக அமைந்துள்ள புண்ணிய ஸ்தலமாக உள்ளது. கோயிலைச் சுற்றி, அமைந்துள்ள கோட்டை மண்ணால் அமைக்கப்பட்ட பிரமாண்ட மதில் சுவரை அரணாகக் கொண்டது. சுவரின் மறுபுறம் சுமார் 15 அடி ஆழத்தில் அகழி உள்ளது.

கோட்டையில் மிகப்பெரிய குளம், ஓய்வறை, யானை, குதிரைகளின் லாயங்கள் உள்ளன. தற்போது இந்த லாயங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. தர்பார் அரண்மனை, 50 அடி உயரம், 75 அடி நீளம், 30 அடி அகலம் கொண்ட தானிய சேமிப்புக் கிடங்கு உள்ளது. > கல்யாண ராமர் கோயில் மண்டபத்தில் உள்ள 29 தூண்களில் ஒவ்வொரு ஓசையை வெளிப்படுத்தும் இசைத்தூண்களாக உள்ளன.

தருமபுரியில் இருந்து 36 கிலோ மீட்டர், அரூரிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோட்டை தற்போது பராமரிப்பு இன்றி சிதைந்து அழியும் நிலையில் உள்ளது. சுற்றுலாப் பயணிகள் காண வேண்டிய முக்கிய இடங்களில் ஒன்றாக விளங்கும் தென்கரைக்கோட்டை குறித்த தகவல், பெயர் பலகை கூட இல்லை.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் குமரவேல் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது;

16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை தற்போது பராமரிப்பின்றி மரங்கள், முட்புதர்கள் நிறைந்து காணப்படுகிறது.

அழியும் நிலையில் உள்ள தொன்மை வாய்ந்த கோட்டையை பாதுகாத்து, சுற்றுலாப் பயணிகளும், மாணவ, மாணவிகளும் பண்டைய கால அரசர்களின் வாழ்வியலை அறிந்து கொள்ளும் வகையில் பாதுகாக்கவும், பராமரிக்கவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வரலாற்று சிறப்பு மிக்க கோட்டையை சுற்றுலா தலமாக்க வேண்டும், என கேட்டுக்கொண்டனர்.

SCROLL FOR NEXT