மூணாறு அருகே சின்னக்கானல் நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள். படம்: என்.கணேஷ்ராஜ். 
சுற்றுலா

மூணாறில் மழையால் சரிந்த சுற்றுலா வர்த்தகம் இப்போது தொடர் விடுமுறையால் மீண்டது

என்.கணேஷ்ராஜ்

போடி: தொடர் விடுமுறையால் மூணாறில் சுற்றுலா சார்ந்த வர்த்தகம் களைகட்டியுள்ளது. கனமழை, நிலச்சரிவு போன்ற பாதிப்புகளினால் தடைபட்டிருந்த சுற்றுலா சார்ந்த தொழில்கள் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது வியாபாரிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறில் சுற்றுலா சார்ந்த தொழில்களே அதிகம். டீ கடை முதல் ஆட்டோ, ஜீப், விடுதி, ஹோட்டல், கைடு, ரிசார்ட்ஸ் என்று அனைத்தும் உள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நம்பியே இயங்கி வருகின்றன. இந்நிலையில், பிப்ரவரியில் இருந்து வடமாநில சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அதிகளவில் வரத் தொடங்கினர். இந்நிலையில், தென்மேற்குப் பருவமழையினால் சுற்றுலாத் தொழில் பாதித்தது. மேலும் கடந்த மாதம் பெய்த தொடர் கனமழை, நிலச்சரிவு போன்ற ஸ்திரத்தன்மை அற்ற காலநிலையினால் திட்டமிட்டிருந்த பயணங்களை பலரும் ரத்து செய்தனர். இதனால் மீண்டும் சுற்றுலா வர்த்தகத்தில் தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த வாரம் மழைப்பொழிவு குறைந்ததுடன் ரம்யமான சூழ்நிலையும் நிலவி வருகிறது. கடந்த சனி, ஞாயிறு மற்றும் சுதந்திர தினம் என் தொடர் விடுமுறையின் காரணமாக ஏராளமானோர் மூணாறுக்கு வந்திருந்தனர். இதனால் மாட்டுப்பட்டி அணை, இக்கா நகர், உடுமலை மற்றும் அடிமாலி சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. ஹோட்டல்களில் கூட்டம் அலைமோதியது. மேலும் ஆட்டோ, விடுதி, ஜீப், ரிசார்ட்ஸ், கைடு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா சார்ந்த வர்த்தகங்களும் களைகட்டியது.

இதுகுறித்து வியாபாரி சந்துரு என்பவர் கூறுகையில், மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் மூணாறில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் சிறு வியாபாரம் முதல் பல்வேறு சுற்றுலா சார்ந்த தொழில்களும் புத்துயிர் பெற்றுள்ளன. அதற்கு ஏற்ற பருவநிலை நிலவுதால் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வர வாய்ப்புள்ளது என்றார்.

SCROLL FOR NEXT