சுற்றுலா

கொடைக்கானலில் 63-வது மலர் கண்காட்சி தொடக்கம்: கோடை விழா தேதி இன்னும் முடிவாகவில்லை

ஆ.நல்லசிவன்

பழநி: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 63-வது மலர் கண்காட்சி இன்று (புதன்கிழமை) காலை தொடங்கியது.

‘மலைகளின் இளவரசி’ என்றழைக்கப்படும் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்றான பிரையன்ட் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கொண்டாடப்படுகிறது. இதைப் பார்த்து ரசிக்க தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

தமிழகத்தில் சட்டப்பேரவை நடந்து முடிந்து, முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் இன்னும் துறை சார்ந்த அமைச்சர் நியமிக்கப்படாததால் மலர் கண்காட்சி மற்றும் கோடை விழாவுக்கான தேதியை முடிவு செய்வது, நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் திடீரென இன்று (மே 20) 63-வது மலர் கண்காட்சி தொடங்கும் என நேற்று (மே.19) இரவு 7 மணிக்கு அறிவிக்கப்பட்டு, இன்று (புதன்கிழமை) காலை மலர் கண்காட்சி தொடங்கியது. மலர் கண்காட்சியை முன்னிட்டு நடவு செய்யப்பட்டுள்ள ரெனன்குலஸ், கிலாக்சினியா, ஹைப்போயெஸ்டெஸ், கோச்சியா உள்ளிட்ட 85 வகையான 6 லட்சம் செடிகளில் மலர்கள் பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கி, சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகின்றன.

கண்காட்சியின் சிறப்பு அம்சமாக ஒரு லட்சம் கார்னேஷன் மலர்களால் அமைக்கப்பட்ட திண்டுக்கல் பூட்டு, ஜல்லிக்கட்டு காளையை வீரர் அடக்குவது, தஞ்சை பெரிய கோயில், பாம்பன் பாலம் மற்றும் ஒரு டன் காய்கறிகள், பழங்களால் அமைக்கப்பட்ட தேவாங்கு, பூக்கூடை, பெண், மயில், அன்ன பறவை பார்வையாளர்களை கவர்ந்தன.

இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் வளரும் 30 வகையான கொய் மலர்கள் மொத்தம் 10,000 தொட்டிகளில் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. பல்வேறு அரசு துறைகள் சார்பில் 20-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இன்று தொடங்கி, மே.31-ம் தேதி வரை 12 நாட்களுக்கு மலர் கண்காட்சி நடைபெறுகிறது.

அதே சமயம், சுற்றுலாத் துறை சார்பில் நடத்தப்படும் கோடை விழாவுக்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. சென்ற ஆண்டை போல், இந்தாண்டும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், படகு அலங்காரப் போட்டி, ‘பாரா செயிலிங்’ எனும் பாராசூட் சாகச நிகழ்ச்சி, ராட்சத காற்றாடி திருவிழா, நாய்கள் கண்காட்சி நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

மலர் கண்காட்சியை முன்னிட்டு பிரையன்ட் பூங்காவில் பார்வையாளர்களை அனுமதிக்கும் நேரம் இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.80, சிறுவர்களுக்கு ரூ.50-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள, மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவரது உதவியாளர் ஒருவரும் கட்டணமின்றி கண்காட்சியை பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT