சென்னை: சுற்றுலாத் துறை சார்பில் 387-வது மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 'சென்னை டு மெட்ராஸ்' சிறப்பு புகைப்படக் கண்காட்சியை அமைச்சர்கள் ராஜ்மோகன், ராஜேஷ்குமார் தொடங்கி வைத்தனர்.
387-வது மெட்ராஸ் தினத்தையொட்டி கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், 'சென்னை டு மெட்ராஸ்' என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், சுற்றுலாத் துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சர்வதேச புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் எல்.ராமச்சந்திரன், கரோனா பொது முடக்கம் காலத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பதிவு செய்த கறுப்பு- வெள்ளை புகைப்படங்களின் சிறப்புத் தொகுப்பு இக்கண்காட்சியின் சிறப்பம்சமாக விளங்கியது. ஆக.31-ம் தேதிவரை நடைபெறும் இந்த கண்காட்சியை பொதுமக்கள், மாணவர்கள், கலை ஆர்வலர்கள், புகைப்படக் கலைஞர்கள், கலைச் சேகரிப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கண்காட்சியை இலவசமாகப் பார்வையிடலாம்.
விக்டோரியா பொது அரங்கத்தில் சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திரைப்பட பின்னனி பாடகி மீனாட்சி இளையராஜா மற்றும் முத்து மண்ணிசை பாடல்கள் பாட அரவிந்த் கரகம், குரு நாதன் குழு ஒயில், மயிலாட்டம் கலை நிகழ்ச்சிகள், சென்னை டு மெட்ராஸ் வரை, சென்னையும் பாரதியும் உள்ளிட்ட காணொளிகள் மற்றும் மெட் ராஸ் வரலாற்றுத் தொடர் ஆகியவை வெளியிடப்பட்டன.
சென்னையின் உணவு, கலாச்சாரம் மற்றும் தனித்துவமான அடையாளங்களை உலக அளவில் அறிமுகப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட டேஸ்ட் ஆஃப் சென்னை இலச் சினையும் வெளியிடப்பட்டது. மேலும், காமிக் லைப்ரரி சார்பில் சென்னையின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தி லாஸ்ட் டிராம் காமிக் புத்தகமும் வெளியிடப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் ராஜேஷ்குமார், சான்றிதழ்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சுற்றுலாத் துறை இயக்குநர் வீ.ப.ஜெய சீலன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர் சி.லட்சுமி பிரியா, இணை இயக்குநர் மு.சேக் மன்சூர், சுற்றுலாத்துறை உயர் அலுவலர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.