சுற்றுலா

தலைகீழ் ரோலர் கோஸ்டர், ஸ்கை... - ரகம் ரகமான ரைடுகளுடன் சென்னை ‘வொண்டர்லா’ டிச.2-ல் திறப்பு

ம.மகாராஜன்

சென்னை: தலைகீழ் ரோலர் கோஸ்டர், ஸ்பின் மில் போன்ற உயர் தரம் வாய்ந்த, பிரம்மாண்டமான ரைடுகளுடன் சென்னை ‘வொண்டர்லா’ பொழுதுபோக்கு பூங்கா வரும் டிச.2-ம் தேதி திறக்கப்பட உள்ளது.

இந்தியாவில் பிரபலமான பொழுதுபோக்கு பூங்காக்களில் ஒன்றான வொண்டர்லா, கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத், புவனேஷ்வர் ஆகிய நகரங்களை தொடர்ந்து தமிழகத்தில் சென்னையில் வரும் டிச.2-ம் தேதி திறக்கப்படுகிறது.

பூங்காவின் சிறப்பம்சங்கள் குறித்து வொண்டர்லா ஹாலிடேஸ் செயல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அருண் கே.சிட்டிலப்பிள்ளி, முதன்மை செயலாக்க அதிகாரி தீரன் சவுத்ரி, பொறியியல் துணைத் தலைவர் அஜிகிருஷ்ணன், சென்னை பூங்கா தலைவர் வைஷாக் ரவீந்திரன் ஆகியோர் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “சென்னையில் வொண்டர்லாவை திறப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். இது எங்களுடைய 5 கிளையாகும்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே இள்ளலூர் கிராமத்தில் மொத்தமாக 64.30 ஏக்கர் பரப்பளவில் ரூ.611 கோடி மதிப்பீட்டில், குழந்தைகள், இளைஞர்கள், குடும்பங்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உலகத் தரம் வாய்ந்த 43 பிரம்மாண்டமான ரைடுகளுடன் இதை உருவாக்கியிருக்கிறோம். தினந்தோறும் 6,500 பேர் பூங்காவுக்கு வந்து செல்லும் வகையில் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதிலுள்ள தஞ்சோரா ரோலர் கோஸ்டர், இந்தியாவின் முதல் தலைகீழாக தொங்கி பயணிக்கும் ரோலர் கோஸ்டராகும். ஸ்விஸ் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த கோஸ்டர் உண்மையிலேயே பறப்பது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தும். இத்துடன் இந்தியாவின் மிகவும் உயரமான (50 மீட்டர்) ரைடான ஸ்பின் மில், பூங்காவின் முப்பரிமாண காட்சியை வழங்கும் 540 மீட்டர் நீளமுள்ள ஸ்கை ரயில் போன்றவை பயணிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும்.

17634673363400

வொண்டர்லாவுக்கான கட்டணம் வார நாட்களில் வயது வந்தவர்களுக்கு ரூ.1,489 ஆகவும், குழந்தைகளுக்கு ரூ.1,191 ஆகவும், முதியோர்களுக்கு ரூ.1,117 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் வயது வந்தவர்களுக்கு ரூ.1,779 ஆகவும், குழந்தைகளுக்கு ரூ.1,423 ஆகவும், முதியோர்களுக்கு ரூ.1,334 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. https://bookings.wonderla.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் முன்பதிவுக்கு 10 சதவீதமும், நேரடியாக டிக்கெட் பெறும் கல்லூரி மாணவர்களுக்கு 20 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படும்.

பிறந்த மாதத்தில் வருபவர்கள், ஒரு டிக்கெட் வாங்கினால், ஒரு டிக்கெட் இலவசமாகப் பெறலாம். இதுதவிர டிச.2-ம் தேதி திறப்பு நாள் சலுகையாக டிக்கெட்டுகளை ரூ.1,199 என்ற சிறப்பு விலையில் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். ஸ்கை வீல் கோபுரத்தின் உச்சியில் 360 டிகிரி கோணத்தில் இயங்கும் ஏசி உணவகம் மார்ச் மாதம் திறக்கப்படும்.

ஐரோப்பிய பாதுகாப்புத் தரச் சான்றிதழைப் பெற்றுள்ள சென்னை வொண்டர்லா தமிழக மக்களுக்கு ஒரு புதிய மற்றும் முழுமையான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும்” என்று அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT