நாகர்கோவில்: கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்தில் சீரமைப்பு பணிகள் முடிந்த நிலையில் 4 நாட்களுக்கு பின்னர் இன்று (ஏப்.19) சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழைப்பாலம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த கண்ணாடி இழை பாலம் அமைத்த பின்னர் கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் இந்த கண்ணாடி பாலத்தின் மேல் நடந்து சென்று கடல் அழகை ரசித்தபடி சென்று திருவள்ளுவர் சிலை பகுதியை அடைகின்றனர்.
இதனால் கண்ணாடி பாலத்தின் உறுதி தன்மையை பரிசோதித்து அவ்வப்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பாலம் அமைத்து மூன்றரை மாதத்திற்குள் 3 முறைக்கு மேல் கண்ணாடி பாலத்தின் உறுதி தன்மை பரிசோதித்து சீரமைப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. கடந்த 15-ம் தேதி கண்ணாடி பாலத்தின், பராமரிப்பு பணிகள் நிபுணத்துவம் பெற்ற பொறியாளர்கள் மேற்பார்வையில் நடைபெற்றது. இப்பணி 5 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கண்ணாடி பாலம் பராமரிப்பு பணியால் கடந்த 15ம் தேதியில் இருந்து சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த தடை இன்று (ஏப்.19) வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு இருக்கும் என குமரி மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் புனித வியாழன் முதல் ஈஸ்டர் வரை தொடர் விடுமுறை தினங்கள் இருப்பதால் வழக்கத்தைவிட அதிகமானோர் கன்னியாகுமரிக்கு வருகை புரிந்தனர். இந்நேரத்தில் பராமரிப்பு பணி மேற்கொண்டதற்கு சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து பராமரிப்பு பணி ஒரு நாள் முன்னதாகவே முடிந்ததால் சனிக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் பாலத்தில் செல்லஅனுமதிக்கப்பட்டனர். இதனால் படகு இல்லத்திலிருந்து விவேகானந்தர் பாறை வரை சென்ற சுற்றுலாப் பயணிகள் கண்ணாடி இழை பாலம் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டனர். கன்னியாகுமரியில் இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. நாளை ஈஸ்டர் பண்டிகை என்பதால் ஏராளமானோர் கன்னியாகுமரியில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.