ஊட்டி தாவரவியல் பூங்காவில் நேற்று திரண்டிருந்த சுற்றுலாப் பயணிகள். | படம்: ஆர்.டி.சிவசங்கர் | 
சுற்றுலா

தொடர் விடுமுறை: நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் குவிந்த பயணிகள்

செய்திப்பிரிவு

ஊட்டி: புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை என தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலை தாக்குப் பிடிக்க முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். வெயிலை சமாளிக்க பொதுமக்கள் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைவாசஸ்தலங்களுக்குப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். மேலும், தொடர் விடுமுறை காரணமாகவும் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜாப் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் நேற்று பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. அவ்வப்போது ஊட்டியில் கோடை மழை பெய்வதால், வெயிலின் தாக்கம் குறைந்து ரம்மியமான தட்பவெப்ப நிலை நிலவியது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஊட்டியின் ரம்மியமான சூழலை மகிழ்ச்சியுடன் அனுபவித்தனர்.

ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானத்தில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர். இதேபோல, நகருக்கு வெளியில் உள்ள சூட்டிங் மட்டம், பைக்காரா படகு இல்லம், கேர்ன்ஹில் வனம் ஆகிய இடங்களிலும் கூட்டம் காணப்பட்டது.

ஊட்டி அருகேயுள்ள தொட்டபெட்டா மலைச் சிகரம் கடல் மட்டத்தில் இருந்து 2,636 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு செல்ல ஒரு நபருக்கு ரூ.10 நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வாகனங்களை நிறுத்த இடவசதி செய்யப்பட்டு உள்ளது. அங்குள்ள தொலைநோக்கி இல்லத்தில் நவீன தொலைநோக்கிகள் மூலம் குன்னூர் நகரம், வெலிங்டன், கோவை, கேத்தி பள்ளத்தாக்கு, உதகை நகரம், அவலாஞ்சி அணை, மாநில எல்லை, முக்கூர்த்தி அணை உட்பட்ட இடங்களை கண்டுகளிக்கலாம்.

தொட்டபெட்டா சிகரத்தில் வழக்கத்தைவிட நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது. இங்குள்ள காட்சி கோபுரத்தில் இருந்து தொலைநோக்கி மூலம் பிற பகுதிகளைப் பார்க்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டினர். மலைச் சிகரம் மற்றும் பாறைகளில் நின்றபடி சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் விளைந்த பழங்கள், மலைக் காய்கறிகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

அதிக வாகனங்கள் சென்று வந்ததால் தொட்டபெட்டா சிகரத்துக்கு செல்ல கூடிய சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால், ஊட்டி-குன்னூர், ஊட்டி-கோத்தகிரி, ஊட்டி-கூடலூர் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

SCROLL FOR NEXT