சென்னை: 2028-ம் ஆண்டு நடைபெறவுள்ள உஜ்ஜயினி கும்ப மேளாவில் 60 கோடிக்கும் அதிமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என மத்திய பிரதேச சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசம் சுற்றுலாத் துறை சார்பில், தமிழக சுற்றுலாப் பயணிகளையும், அதிக அளவில் முதலீடுகளையும் ஈர்க்கும் வகையில் சென்னை நந்தனத்தில் நேற்று சுற்றுலா கண்காட்சி நடந்தது.
இதில் மத்திய பிரதேச சுற்றுலா வாரிய இயக்குநர் ஷீயோ சேகர் சுக்லா, துணை இயக்குநர் யுவராஜ் படோல் மற்றும் தொழில் துறை பங்குதாரர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மத்திய பிரதேச மாநிலத்தின் சுற்றுலாத் துறையின் சிறப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அப்போது, துணை இயக்குநர் யுவராஜ் படோல் பேசியதாவது:
மத்திய பிரதேசம் ஆன்மிகம், பாரம்பரியம், வனவிலங்கு ஆகியவற்றை உள்ளடக்கிய சுற்றுலாத் தலமாகும். போபால், இந்தூர், குவாலியர், கஜுராஹோ, ஜபால்பூர், பச்மரி உள்ளிட்ட 5 சுற்றுலாத் துறை மண்டலங்கள் மத்திய பிரதேசத்தில் உள்ளன. ஒரு மண்டலத்துக்கு ஒரு வாரம் என 5 மண்டலங்களையும் முழுமையாக சுற்றிப்பார்க்க 5 வாரங்கள் எடுத்துக்கொள்ளும்.
யுனெஸ்கோ பாரம்பரிய தலங்கள்: இங்கு 18 யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் உள்ளன. மத்திய பிரதேசம் பாதுகாப்பான சுற்றுலாப் பயணத் தலமாக உருவெடுத்துள்ளது. சுற்றுலாத் துறையின் வளர்ச்சி காரணமாக மத்தியபிரதேசத்தின் பொருளாதாரம் கனிசமாக உயர்ந்துள்ளது. லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.
2022-ம் ஆண்டு 3.67 கோடி சுற்றுலா பயணிகளும், 2023-ம் ஆண்டில் 11.21 கோடி சுற்றுலா பயணிகளும், 2024-ம் ஆண்டில் 13.33 கோடி சுற்றுலா பயணிகளும் மத்திய பிரதேசம் வந்துள்ளனர்.
தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் இருந்து கனிசமான அளவில் சுற்றுலா பயணிகள் மத்திய பிரதேசம் வந்துள்ளனர். நடப்பாண்டில் 20 சதவீதம் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2028 ஆண்டு மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜயினியில் நடைபெற உள்ள கும்ப மேளாவில், 60 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.