வார விடுமுறையை ஒட்டி கன்னியாகுமரியில் உள்ள திற்பரப்பு அருவியில் ஏராளமான மாணவ, மாணவிகள் தங்கள் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்தனர்.  
சுற்றுலா

குமரி சுற்றுலா மையங்களில் குவிந்த பயணிகள் - திற்பரப்பு அருவியில் சிறுவர்கள் உற்சாகம்

எல்.மோகன்

நாகர்கோவில்: வார விடுமுறையை முன்னிட்டு சனிக்கிழமை கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா மையங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். திற்பரப்பு அருவிக்கு குடும்பத்துடன் வந்த பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்கள், மற்றும் பண்டிகை விடுமுறை, சீஸன் காலங்களில் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவர். இன்று சனிக்கிழமை என்பதால் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மற்றும் வட மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் வேன்களிலும், சுற்றுலா பேருந்துகளிலும் அதிகாலையிலேயே வந்து சூரிய உதயத்தை பார்க்க முக்கடல் சங்கம பகுதியில் திரண்டனர்.

இன்று மேகமூட்டத்தால் சூரிய உதயம் தாமதமாக தென்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். கன்னியாகுமரியில் படகு சவாரி செய்து விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, கண்ணாடி நடைபாலம் ஆகியவற்றில் செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர். அதேபோல் அதிகாலை 4 மணியளவிலேயே திற்பரப்பு அருவி பகுதியில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகமாக நின்றன.

அருவியில் குளிப்பதற்கு காலை 6 மணிக்கு தான் அனுமதிக்கப்படுவர் என்பதால், அதுவரை திற்பரப்பில் உள்ள கடைகள், மற்றும் மகாதேவர் கோயில் பகுதியில் சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர். பின்னர் அருவியில் நுழைவு சீட்டு கொடுக்க அனுமதித்ததும் வரிசையில் நின்றிருந்த மாணவ, மாணவிகள், மற்றும் மற்ற சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவியில் குளித்தனர். வெயிலுக்கு இதமாக மிதமாக கொட்டிய தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் குலசேகரம் வழித்தடத்தில் திற்பரப்பு செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

SCROLL FOR NEXT