கோப்புப்படம் 
சுற்றுலா

நீலகிரி வரும் சுற்றுலா பயணிகள் மாஸ்க் அணிய ஆட்சியர் அறிவுறுத்தல்

ஆர்.டி.சிவசங்கர்

உதகை: ஹெச்எம்பி வைரஸ் பரவல் எதிரொலியாக நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணிய மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா அறிவுறுத்தி உள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஹெச்எம்பி வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெங்களூருவில் மாஸ்க் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கர்நாடகம் மற்றும் கேரளாவை ஒட்டி உள்ளதாலும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருவதாலும், நீலகிரி மாவட்டத்தில் சுகாதாரத் துறை பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா இன்று நிருபர்களிடம் கூறியது: “பெங்களூரில் இரண்டு பேருக்கு ஹெச்எம்பிவி வைரஸ் பரவி இருக்கிறது. இதனால், அந்த வைரஸ் பரவாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்பது குறித்து ஒரு அறிக்கை சுகாதாரத் துறை தயாரித்து வருகிறது. அதேபோல் நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருவார்கள்.

உள்ளூர் மக்களிடம் இந்த வைரஸ் பரவாமல் இருக்க கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணிவது நல்லது. அதேபோல் பொங்கல் விடுமுறையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கும் நிலையில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்தால் முகக்கவசம் கட்டாயம் ஆக்கப்படுவது குறித்து உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும்.

அதேபோல் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் தங்கள் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி சமையல் செய்வதும், தூங்குவதும் நடந்து வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு உள்ளூர் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதை கருத்தில் கொண்டு அதிகாரிகள். போலீஸார், வாடகை டேக்ஸி ஓட்டுநர்கள் உள்ளூர் மக்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும்.

அக்குழு, பேருந்துகளை நகருக்குள் அனுமதிக்காமல் அந்தந்த பகுதிகளில் நிறுத்தி வைக்கவும், சுற்றுலா பயணிகள் அரசு பேருந்துகளில் முக்கிய சுற்றுலா தளங்களுக்கு செல்லவும் ஏற்பாடு செய்யப்படும்,” என்று அவர் கூறினார்

SCROLL FOR NEXT