நாகர்கோவில்: கன்னியாகுமரி கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை கூண்டு பாலம் சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாலத்தில் கடந்த 4-ம் தேதியில் இருந்து சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
பாலம் வழியாக நடந்து செல்ல மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர், அனுமதி அளித்த முதல் இரு நாட்களில் மட்டும் 15 ஆயிரம் பேர் கண்ணாடி இழைப்பாலத்தில் நடந்து சென்றவாறு திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டுள்ளனர். இந்நிலையில், கண்ணாடி இழை பாலத்தில் காலணி அணிந்து நடந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்றில் இருந்து காலணியுடன் வந்த சுற்றுலா பயணிகளுக்கு பாலத்தில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காண்ணாடி பாலத்தில் கீறல்கள் ஏற்பட்டு பழுது ஏற்படாத வகையில் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதேநேரம் விவேகானந்தர் பாறையில் கண்ணாடி இழைப்பாலம் தொடங்கும் பகுதியில் சுற்றுலா பயணிகளின் காலணிகளை பாதுகாக்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். திருவள்ளுவர் சிலையை பார்த்து திரும்பும் வரை சுற்றுலா பயணிகள் காலனி இன்றி செல்ல வேண்டி உள்ளது. எனவே, இந்த ஏற்பாட்டை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.