உதகை: நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த 2023-ம் ஆண்டைவிட கடந்த ஆண்டு குறைந்துள்ளது.
சர்வதேச சுற்றுலா நகரமான நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.
கரோனா பாதிப்பு காரணமாக 2020 முதல் 2022-ம் ஆண்டு வரை சுற்றுலாப் பயணிகள் வர தடை இருந்த நிலையில், உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் மிகவும் குறைந்தே காணப்பட்டது. 2022 முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தது. இரு ஆண்டுகளுக்கு பின்னர் உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் வந்த நிலையில், அங்குள்ள வியாபாரிகள், தோட்டக்கலை, சுற்றுலாத் துறையினருக்கு வருவாய் கிடைக்கத் தொடங்கியது.
2023-ம் ஆண்டு முதல் மீண்டும் உதகை வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. 2023 ஜனவரி மாதம் முதல் டிசம்பர் வரை 28 லட்சம் சுற்றுலாப் பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்கு வந்துள்ளனர். இது 2022-ம் ஆண்டைக் காட்டிலும் 4 லட்சம் அதிகம்.
இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் முதல் நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதனால், கடந்த மே மாதத்தில் உதகை வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. தொடர்ந்து உதகை வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை சற்று குறைந்தே காணப்படுகிறது. இதனால், 2023-ம் ஆண்டைக் காட்டிலும் 2024-ல் 4 லட்சம் சுற்றுலாப் பயணிகள் குறைவாக வந்துள்ளனர். 2024 ஜனவரி மாதம் முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்கு 23 லட்சத்து 95 ஆயிரத்து 894 சுற்றுலா பயணிகள் மட்டுமே வந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது தேயிலை விளைச்சல் மற்றும் சுற்றுலாத் துறைகளாகும். இந்தியாவில் காஷ்மீரை அடுத்து அனைவரையும் ஈர்த்த சுற்றுலா ஸ்தலம் நீலகிரி. இதனால் ஏழைகளின் காஷ்மீர் என்று உதகை அழைக்கப்படுகிறது. காஷ்மீரில் தீவிரவாதம் தலைதூக்கியதால் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தது. குறிப்பாக, கோடை காலத்தில் தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலத்தவரும், இரண்டாம் சீசனான செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தேனிலவு ஜோடிகள் மற்றும் வெளிநாட்டினரும் அதிகம் பேர் வருவர்.
நீலகிரி ஆவண மைய இயக்குநர் டி.வேணுகோபால் கூறும்போது, ‘நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இங்கு அதிக காலம் தங்குவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஆனால், சுற்றுலா திட்டம் இதுவரை வரையறுக்கப்படவில்லை. உதகையை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், குன்னூர், கூடலூர், கோத்தகிரி மற்றும் குந்தா பகுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும்.
சுற்றுலாவை தரம் பிரித்து, மருத்துவம், விளையாட்டு சுற்றுலாக்களை திட்டமிட வேண்டும். உதகையில் நிரந்தர பொருட்காட்சி நடத்த ஏற்பாடு செய்யலாம். பன்னாட்டு நிறுவனங்களின் கருத்தரங்குகளை நீலகிரி மாவட்டத்தில் நடத்துவதற்காக கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். உதகையில் ரோஜாப் பூங்கா உருவாக்கப்பட்ட பின்னர் சுற்றுலா தொடர்பான திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. சுற்றுலாப் பயணிகளை கவர ஆக்கபூர்வமான திட்டங்களை செயல்படுத்தினால், நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து, பொருளாதாரமும் உயரும். இவ்வாறு அவர் கூறினார்.
இ-பாஸ் நடைமுறை: நீலகிரி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ரமேஷ் கேம்சந்த், செயலாளர் முகமது ரபீக் ஆகியோர் கூறும்போது, "இ-பாஸ் நடைமுறையால் முதன்மையாக சுற்றுலாவை நம்பியிருப்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் மற்றும் சுற்றுலாத் துறை சார்ந்த வணிகத்தில் 45 சதவீதத்துக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இ-பாஸ் முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்றனர்.