புதுடெல்லி: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் அயோத்யாவின் ராமர் கோயில் தரிசனத்திற்காக பக்தர்கள் குவிகின்றனர். இதுவரை இல்லாத வகையில் உ.பி.க்கு சுற்றுலாவாசிகள் வருகை வரலாறு படைப்பதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு பெருமிதம் கொண்டுள்ளது.
அயோத்யாவில் கடந்த ஜனவரியில் ராமர் கோயில் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 22-ல் பிரதமர் நரேந்திர மோடியால் இக்கோயில் திறந்து வைக்கப்பட்ட முதலாகவே ராமரின் தரிசனத்திற்கு அன்றாடம் பக்தர்கள் வருகின்றனர்.
இந்த கூட்டம், வார இறுதியின் விடுமுறை நாட்களில் மிகவும் அதிகமாக உள்ளது. தற்போது உ.பி.யில் நிலவும் கடுமையானக் குளிர் சூழலிலும், திங்கள்கிழமையான இன்றும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
இதற்கு நாளை மறுநாள் விடியும் ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் முடிவிற்கு வரும் ஆண்டும் காரணமாக அமைந்துள்ளது. இவற்றை முன்னிட்டு ராமரின் தரிசனம் பெற பகதர்கள் விரும்புவதாகக் கருதப்படுகிறது.
புத்தாண்டு தினமான ஜனவரி 1-ல் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதாலும் பலர், இருதினங்கள் முன்கூட்டியே ராமர் கோயிலுக்கு பக்தர்கள் வந்து செல்லத் துவங்கி உள்ளனர்.
இது குறித்து அயோத்யா மாவட்ட எஸ்எஸ்பியான ராஜ்கரன் நாயர் கூறும்போது, ‘ராமர் கோயிலுக்கு வரும் கூட்டம் அதிகரித்து விட்டது. இதனால், கூட்டத்தினரை சமாளிக்க நாம் கூடுதலானக் காவல் படையை தலைமையகத்திலிருந்து அனுப்பக் கோரியுள்ளோம்.
இந்த கூடுதல் படையினருடன் நாம் பக்தர்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் தம் தரிசனத்தை முடித்துக் கொள்ளலாம். அயோத்யா நகரம் முழுவதும் பகுதிகளாகவும், பிராந்தியங்களாகவும் பிரித்து பாதுகாப்பு பணியை அமர்த்தி உள்ளோம். முக்கிய கோயில் அனைந்த பகுதிகளான ராமர் கோயில், ஹனுமர்கடி, லதா சோக், குப்தர் காட், சூரஜ்குண்ட் போன்றவற்றில் கூடுதலனாப் பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளன’ எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், அயோத்யாவின் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், மடங்கள் அனைத்திலும் முன்கூட்டியே தங்கும்வசதிக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுபோலான பதிவுகள், கடந்த ஜனவரியில் ராமர் கோயில் திறப்பின் போது இருந்தது.
இதுபோன்ற பக்தர்கள் குவிவதன் காரணமாக கோயிலை நிர்வாகிக்கும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையினர், தரிசன நேரத்தை அதிகரித்துள்ளனர்.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி அரசின் சுற்றுலாத் துறையின் ஒரு புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 2022-ம் ஆண்டில் உபிக்கு சுற்றுலாவாசிகள் எண்ணிக்கை 32.18 கோடி.
இந்த எண்ணிக்கையை விட அதிகமான 32.98 கோடி சுற்றுலாவாசிகள் நடப்பு வருடமான 2024 இன் முதல் ஆறு மாதங்களிலேயே வந்து சென்றுள்ளனர். இந்த புள்ளி விவரத்தை வெளியிட்ட முதல்வர் யோகி அரசு அதற்கானக் காரணங்களையும் வெளியிட்டிருந்தது.
அதில், கூடுதலான சுற்றுலாவாசிகள் வரவின் பின்னணியில் அயோத்யாவின் ராமர் கோயில், வாரணாசியின் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளிட்டவை உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது.
மேலும், இதுவரை உ.பி வரலாற்றில் இல்லாதபடி, கடந்த ஜனவரி ஒரு மாதத்தில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் வந்து சென்றுள்ளனர். இதற்கு அயோத்யாவின் ராமர் கோயில் திறப்பும் காரணமாகி உள்ளது எனவும் அந்த புள்ளிவிவரம் குறிப்பிட்டிருந்தது.