நாகர்கோவில்: கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை இரவு நேரத்திலும் கரைப்பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழும் வகையில் லேசர் ஒளி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளிவிழா கொண்டாட்ட முன்னேற்பாடுகளுக்கு மத்தியில் இவ்வசதி செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும், மற்றொரு பாறையில் விவேகானந்தர் மண்டபமும் உள்ளது. தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிறது. திருவள்ளுவர் சிலையை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வந்தனர். அடிக்கடி கடலில் நிகழும் இயற்கை மாற்றங்களின் காரணமாக படகு போக்குவரத்து திருவள்ளுவர் பாறைக்கு நிறுத்தப்படுகிறது.
இதனால் திருவள்ளுவர் சிலையை நேரில் சென்று பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து ரூ.37 கோடி செலவில் திருவள்ளுவர் சிலைக்கும். விவேகானந்தர் பாறைக்கும் இடையே கண்ணாடி கூண்டு இழையிலான இணைப்பு பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 75 சதவீத பாலப்பணிகள் முடிந்த நிலையில் இறுதிகட்ட பணி நடைபெற்று வருகிறது. இப்பாலம் வருகிற ஜனவரி 1ம் தேதி திறக்கப்படுகிறது. அத்துடன் டிசம்பர் 31ந் தேதியும், ஜனவரி 1ம் தேதியும் திருவள்ளுவர் சிலைக்கான வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இதன் முன்னேற்பாடகா இரவிலும் கடற்கரையில் இருந்தவாறே சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்த்து ரசிப்பதற்கு வசதியாக மின்விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த மின்விளக்கு வசதி போதுமானதாக இல்லாததால் இரவு நேரங்களில் திருவள்ளுவர் சிலையை முழுமையான ஒளியில் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து திருவள்ளுவர் சிலையை இரவில் ஒளி வெள்ளத்தில் மிளிர செய்வதற்காக ரூ.3 கோடி செலவில் லேசர் விளக்கு வசதி ஏற்படுத்த தமிழக சுற்றுலாத்துறை முடிவு செய்தது. அதன்படி லேசர் விளக்கு வசதிக்கான பணிகள் கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்கும் வரத்து கழக படகுத்துறை வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஒலி-ஒளிகாட்சி கூடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து கடலுக்கு அடியில் மின் கேபிள்கள் அமைத்து திருவள்ளுவர் சிலையில் லேசர் மின்விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி திருவள்ளுவர் சிலையில் லேசர் மின்விளக்கு வசதி செயல்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்.