குமரியில் நீடிக்கும் மழையால் திற்பரப்பு அருவியில் கடல் அலைபோன்று ஆர்ப்பரிக்கும் தண்ணீர். 
சுற்றுலா

குமரியில் பருவமழையால் கடல் அலை போல் காட்சி தரும் திற்பரப்பு!

எல்.மோகன்

நாகர்கோவில்: குமரி முழுவதும் பெய்து வரும் பருவமழையால் மாவட்டம் முழுவதும் குளிரான தட்பவெப்பம் நிலவுகிறது. திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரால் கடல் அலை போன்று காட்சியளிக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 4 நாட்களாக வெயிலின்றி மேகமூட்டத்துடன் கூடிய தட்பவெப்பம் நிலவியது. மழையும் அவ்வப்போது கொட்டி தீர்த்ததால் குளிரான தட்பவெப்பம் நிலவுகிறது. மழையால் ரப்பர் பால் வெட்டும் தொழில், மீன்பிடி தொழில், தென்னை சார்ந்த தொழில், கட்டிட தொழில் உட்பட பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சிற்றாறு ஒன்றில் இன்று 46 மிமீ., மழை பெய்தது. அடையாமடையில் 32 மிமீ., குளச்சல், இரணியலில் 28, குருந்தன்கோட்டில் 26, திற்பரப்பில் 24 மிமீ., மழை பதிவானது. மழையால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 519 கனஅடி தண்ணீர் வருகிறது. நீர்மட்டம் 41.60 அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து 501 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 65.68 அடியாக உள்ள நிலையில் அணைக்கு உள்வரத்தாக 309 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 510 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

சிற்றாறு ஒன்று அணையின் நீர்மட்டம் 15 அடியாக உள்ள நிலையில் அணைக்கு 184 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 200 கனஅடி தண்ணீர் உபரியாக வெளியேறி வருகிறது. பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீரால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் கடல் அலை போன்று ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவியில் குளிப்பதற்கு இரு வாரங்களுக்கு மேல் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT