உத்தேச மாதிரி தோற்றம். 
சுற்றுலா

புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைகிறது ‘மார்டன் டாய்லெட்’

அ.முன்னடியான்

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்வது நீண்ட அழகிய கடற்கரை சாலைதான். பழைய சாராய ஆலையில் இருந்து டூப்ளே சிலை வரையிலான ஒன்றரை கிலோ மீட்டர் கடற்கரை சாலை ‘ராக் பீச்’ என அழைக்கப்படுகிறது. இங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிகின்றனர். கடற்கரை சாலையின் இருமுனைகளிலும் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள கழிப்பறைகள் போதுமானதாக இல்லை. சுற்றுலா பயணிகளின் முக்கிய புகார்களில் முதன்மையானது, கடற்கரை சாலையில் சுத்தமான கழிப்பறைகள் இல்லாததுதான்.

உத்தேச மாதிரி தோற்றம்.இந்தச் சூழலால், வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள், குறிப்பாக இளைஞர்கள், இளம் பெண்கள் அதிகாலையில் நகரத்துக்கு வருவதால், புத்துணர்ச்சியடைவது கடினமாக இருக்கிறது. ஓய்வறைகள், குளியலறைகள் உள்ளிட்ட வசதிகளை கொண்ட கழிப்பறைகள் இல்லாதது பெரும் குறையாக இருந்து வருகிறது. இதனிடையே ‘ஸ்வச் பாரத் மிஷன் 2.0’ திட்டத்தின் கீழ் டூப்ளே சிலைக்கு அருகே உள்ள கழிப்பறையை மறுவடிமைக்க புதுச்சேரி நகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் விரைவில் ‘மார்டன் டாய்லெட்’ அமைக்கப்பட உள்ளது. ‘ஸ்வச் பாரத்’ திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள இந்த மார்டன் டாய்லெட்டில் டச்லெஸ் ப்ளஷிங், சானிட்டரி நாப்கின் எரியூட்டிகள், காற்று சுத்திகரிப்பு இயந்திரம் (வெண்டிலேட்டர்), குழந்தை டயபர் மாற்றும் அறை, ஓய்வறைகள், தானியங்கி வாஷ் பேஷின் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டிருப்பதோடு, பகுதியாக குளிரூட்டப்பட்ட வசதியையும் இது கொண்டிருக்கும்.

இதுகுறித்து புதுச்சேரி நகாராட்சி ஆணையர் கந்தசாமியிடம் கேட்டபோது, “ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த திட்டம், வருவாய் பகிர்வு (தனியார்) மாதிரியின் கீழ் மேற்கொள்ளப்படும். முழு குளிரூட்டப்பட்ட பிரீமியம் வகுப்பு கழிப்பறையை பயன்படுத்த பயனாளர்கள் ரூ.100 மற்றும் குளிரூட்டப்படாத கழிப்பறைகளுக்கு ரூ.20 செலுத்த வேண்டியிருக்கும். டாய்லெட் பிளாக்கின் மேல் தளத்தில் கடலுக்கு அருகில் குளிரூட்டப்பட்ட சிறு கடைகளை அமைக்கும் திட்டமும் உள்ளது.

கடலுக்கு அருகில் நிரந்தர கட்டுமானங்கள் அனுமதிக்கப்படாததால், அகற்றக்கூடிய கூடாரங்களைப் பயன்படுத்தி சிறு கடைகள் அமைக்கப்படும். சுகாதாரத்தை பராமரிப்பதில் முக்கியத்துவம் கொடுத்து பராமரிப்பு மற்றும் செயல்படுத்தும் பணிகள் செய்யப்படும். இதற்கான டெண்டர் இம்மாதம் இறுதியில் விடப்பட உள்ளது. கடற்கரை பகுதியில் இந்த ‘மார்டன் டாய்லெட்’ வசதி ஏற்படுத்திக்கொடுப்பது, சுற்றுலாப் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் நல்ல பயனுள்ளதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT