சுற்றுலா

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கும் பணி தீவிரம்

எல்.மோகன்

நாகர்கோவில்: பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவை சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் அம்சங்களாகத் திகழ்கின்றன.

பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும் படகுகளில் சென்று சுற்றுலாப் பயணிகள் வள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்தைப் பார்வையிட்டு வருகின்றனர். வள்ளுவர் சிலை பாறையில் படகு தளம் அமைந்துள்ள பகுதி ஆழம் குறைவாக இருப்பதால், கடல் நீர்மட்டம் தாழ்வுமற்றும் கடல் நிலையில் ஏற்படும் சிறிய மாற்றத்தின்போது படகு தரைதட்டுவதுடன், வேகமாக அசைந்து சுற்றுலாப் பயணிகளை அச்சத்துக்கு உள்ளாக்குகிறது. இதனால் பெரும்பாலான நாட்கள் வள்ளுவர் சிலையை பார்க்க முடியாமல் பயணிகள் ஏமாற்றமடைகின்றனர்.

இதைத் தவிர்க்க, வள்ளுவர் சிலை-விவேகானந்தர் மண்டபம் இடையே ரூ.37 கோடியில் தமிழக அரசால் கடல்சார் பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 77 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்திலும், கடல் மட்டத்தில் இருந்து 7 மீட்டர் உயரத்திலும் கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கப்படுகிறது. பாலத்தின் ஆர்ச் 11 மீட்டர் உயரத்துக்கு அமைக்கப்படுவதுடன், 2.40 மீட்டர் அகலத்தில் கண்ணாடி இழை பாலம் அமையவுள்ளது. இந்தப் பாலத்தில் பொருத்துவதற்காக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கம்பிகளாலான 101 கூண்டுகள், வளைவு, குறுக்கு உத்திரங்கள் ஆகியவை புதுச்சேரியில் வடிவமைக்கப்பட்டு, கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டன.

வள்ளுவர் சிலை பாறை, விவேகானந்தர் பாறை மீது பிரம்மாண்ட கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு, இரு பகுதியையும் இணைக்கும் வகையில் கூண்டு பாலம் அமைப்பதற்கு இரும்புத் தூண்களால் சாரம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து, இரு பாறைகள் இடையே 2 ராட்சத தூண்களையும் இணைக்க இரும்பாலான ரோப்கள் அமைக்கப்பட்டன. அதன் வழியாக விஞ்ச் மூலம் சென்று, இணைப்பு பாலத்தில் கூண்டுகளைப் பொருத்தி வருகின்றனர்.

ஆர்ச்சின் இருபக்கமும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், நடுப்பகுதியை இணைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.

வரும் டிசம்பர் இறுதிக்குள் பணியை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 2025 ஜன.1-ம் தேதி கண்ணாடி இழைக்கூண்டு பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இந்த பாலம் பயன்பாட்டுக்கு வரும்போது விவேகானந்தர் பாறைக்கு படகுகள் சென்றதும், அங்கு இறங்கும் சுற்றுலாப் பயணிகள், இணைப்பு பாலம் மூலம் நடந்தே வள்ளுவர் சிலைக்கு சென்று வர முடியும். அப்போது பாலத்தின் கீழ் பகுதியிலும் கடலைப் பார்வையிடும் வகையில் நவீனத் தொழில்நுட்பத்துடன் பாலம் அமைக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT