திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பரவலாக பெய்துவரும் மழை காரணமாக அருவிகளில் நீர்வரத்து தொடர்கிறது. இது சுற்றுலாபயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தீபாவளி தொடர் விடுமுறை காரணமாக கடந்த இரண்டு தினங்களாக சுற்றுலாபயணிகள் அதிகம் பேர் வந்து சென்றனர். தீபாவளிக்கு அடுத்த நாள் கடும் போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது. தீபாவளிக்கு சொந்த ஊருக்கு வந்தவர்கள் கொடைக்கானலையும் சுற்றிப்பார்த்த நிலையில், விடுமுறை முடிந்து பணிக்கு திரும்ப வேண்டியநிலையில் புறப்பட்டதால், ஞாயிற்றுக்கிழமை அளவான கூட்டமே சுற்றுலாத்தலங்களில் காணப்பட்டது.
கொடைக்கானல் மழைப்பகுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தொடர்ந்து பரவலாக மலைப்பகுதிகளில் மழை பெய்துவருகிறது. இதனால் சுற்றுலாத்தலங்களான வெள்ளிநீர்வீழ்ச்சி, எலிவால்நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, தேவதை நீர்வீழ்ச்சி, கரடிச்சோலை நீர்வீழ்ச்சி என பல நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் தொடர்ந்து கொட்டுகிறது.
இந்த ரம்மியமான காட்சிகளை சுற்றுலாபயணிகள் கண்டு ரசித்தும் செல்பி எடுத்தும், குடும்பத்துடன் குழு புகைப்படம் எடுத்தும் சென்றனர். தொடர் மழையால் கொடைக்கானலில் இதமான தட்பவெப்பநிலை நிலவுகிறது. ஞாயிற்றுக்கிழமை பகலில் கொடைக்கானலில் 23 டிகிரி செல்சியம் வெப்பநிலை பதிவாகியது. குறைந்தபட்சமாக இரவில் 18 டிகிரிசெல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. இதமான குளிர் காணப்பட்டது. பகலில் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் மேகக்கூட்டங்கள் இறங்கிவந்து தழுவிச்சென்றதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.