ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள செண்பகத்தோப்பு பகுதிக்கு செல்வதற்கு, விவசாயிகள், சுற்றுலாப் பயணிகளிடம் வசூலிக்கப்படும் கட்டணம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
செண்பகத்தோப்பு வனப்பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான தென் திருமாலிருஞ்சோலை என அழைக்கப்படும் காட்டழகர் கோயில், வனப்பேச்சி அம்மன் கோயில், ராக்காச்சி அம்மன் கோயில், பேயனாறு, மீன்வெட்டி பாறை அருவி, சாம்பல் நிற அணில்கள் சரணாலயம், புலிகள் காப்பகம் ஆகியவை உள்ளன. இப்பகுதியில் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான 350 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் மற்றும் தனி நபர்களுக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் உள்ளன.
இந்நிலையில், செண்பகத்தோப்புக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாயிகளிடம் செண்பகத்தோப்பு சூழல் மேம்பாட்டுக் குழு சார்பில் ரூ.20 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆண்டாள் கோயில் நிர்வாகம் சார்பில் வாகன நிறுத்த (பார்க்கிங்) கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இது குறித்து வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் இடையே பிரச்சினை ஏற்பட்டபோது, வனத்துறை வாகன நிறுத்த கட்டணம் வசூலித்து, கோயில் நிர்வாகத்துக்கு 60 சதவீதம் வழங்க வேண்டும், என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, கோயில் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, வனத்துறை கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், வாகன நிறுத்த கட்டணத்தை தவிர்த்து, வனத்துறை சார்பில் நுழைவு கட்டணம் வசூலிக்கப் பட்டு வருவது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தேவதானம் சாஸ்தா கோயில், அய்யனார் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்களுக்குச் செல்லும் விவசாயிகளிடம் வனத்துறை கட்டணம் வசூலிக்கிறது. இதனால் விவசாயிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
இதை கண்டித்து, விவசாய சங்கங்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் வனத்துறை கட்டணம் வசூலிப்பதில் பிடிவாதமாக உள்ளது. கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள், விளைநிலங்களுக்குச் செல்லும் விவசாயிகளிடமிருந்து கட்டணம் வசூலிப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தினர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், பழங்குடியின மக்கள் மேம்பாட்டுக்காக சூழல் மேம்பாட்டுக் குழு உருவாக்கப்பட்டு, கூட்டுறவு சங்க சட்டப்படி பதிவு செய்யப்பட்டு செயல்படுகிறது. பொதுமக்களிடம் வசூல் செய்யப்படும் கட்டணத் தொகை பழங்குடியின மக்கள், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக செலவிடப்படுகிறது. வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்க மட்டுமே நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்றனர்.