ஏற்காடு கோடை விழாவையொட்டி, அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர்ச் சிற்பங்களை கண்டு ரசித்திட திரண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் 
சுற்றுலா

களைகட்டிய ஏற்காடு கோடை விழா நிறைவு: 2 லட்சம் பேர் கண்டு ரசிப்பு

எஸ்.விஜயகுமார்

சேலம்: கோடை விழா நிறைவு நாளில், திரண்டு வந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளால் ஏற்காடு திணறியது. இந்த கோடை விழாவை சுமார் 2 லட்சம் பேர் கண்டு ரசித்துள்ளனர்.

தமிழகத்தின் முக்கிய கோடை சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஏற்காட்டில் கோடை விழா - மலர்க்காட்சி கடந்த 22-ம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி, அண்ணா பூங்கா, ஏரிப் பூங்கா உள்பட தோட்டக்கலைத்துறை பூங்காக்களில் காற்றாலை, கடல் வாழ் உயிரினங்கள், கார்ட்டூன் உருவங்கள் உள்ளிட்டவை மலர்ச்சிற்பங்களாக, பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்தன.

மேலும், அரசின் பல்வேறு துறைகள் சார்பில் அரங்குகளும், சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் ஆகியோர் பங்கேற்கும் வகையில், பல வகையான போட்டிகளும், தினமும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு சென்றிட, இ-பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் பலரும் ஏற்காடு சுற்றுலாத் தலத்துக்கு படையெடுத்து வந்தனர்.

இதனிடையே, வெயில், மழை ஏதுமின்றி குளுகுளு காற்று வீசியதால், ஏற்காடு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்தனர். சுற்றுலாப் பயணிகள் பலர் கார்கள், வேன்கள் ஆகியவற்றில் வந்தனர். இதனால், சேலம்- ஏற்காடு மலைப்பாதையில் சுமார் 3 கிமீ., தொலைவுக்கு வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை காணப்பட்டது.

ஏற்காட்டில் உள்ள சாலைகள், சுற்றுலா இடங்களிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து, நெரிசல் காணப்பட்ட நிலையில், போலீஸார் வாகனங்களை ஒழுங்குபடுத்தி, போக்குவரத்தை சீரமைக்கும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், கோடை விழா நிறைவு நாளான இன்று, பொதுமக்கள், அரசு அலுவலர்களுக்கான மலையேற்றம், குழந்தைகளுக்கான தளிர் நடை போட்டி உள்பட பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் பலர் ஆர்வமுடன் பங்கேற்றனர். கோடை விழாவை சுற்றுலாப் பயணிகள் சுமார் 2 லட்சம் பேர் கண்டுகளித்தனர்.

விழா நிறைவையொட்டி, ஏற்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோடை விழா- மலர்க்காட்சியினை சிறப்பாக ஏற்பாடு செய்து ஒருங்கிணைந்து பணியாற்றிய மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, வருவாய்த்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, சுற்றுலாத்துறை உள்பட பல்வேறு துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கும் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, சேலம் கோட்டாட்சியர் அம்பாயிரநாதன், தோட்டக்கலை துணை இயக்குநர் மாலினி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் ரவிக்குமார், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மயில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மலர்க்காட்சி நீட்டிப்பு: கோடை விழாவையொட்டி, ஏற்காடு அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர்க்காட்சியானது, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கிணங்க, வரும் 30-ம் தேதி வரை 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து சுற்றுலாப் பயணிகளுக்காக, சேலத்தில் இருந்து, சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்பட்டு வரும் பேக்கேஜ் சுற்றுலாப் பேருந்து வசதியும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT