கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் மலர்களை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள். 
சுற்றுலா

கொடைக்கானல் கோடைவிழா நிறைவு: அதிக எண்ணிக்கையில் குவிந்த சுற்றுலா பயணிகள் 

பி.டி.ரவிச்சந்திரன்

கொடைக்கானல்: கொடைக்கானலில் பத்து நாட்கள் நடைபெற்றுவந்த கோடைவிழா, மலர்கண்காட்சி நிறைவடைந்தது. நிறைவுநாளில் கொடைக்கானலில் அதிக எண்ணிக்கையில் சுற்றுலாபயணிகள் குவிந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடைவிழா கடந்த மே 17ம் தேதி துவங்கியது. வழக்கமாக மூன்று நாட்கள் நடைபெறும் மல ர்கண்காட்சி இந்த ஆண்டு முதன்முறையாக பத்து நாட்களும் நடைபெற்றது. கோடைவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக நாய்கள் கண்காட்சி, மீன்பிடித்தல் போட்டி, படகு போட்டி, படகு அலங்கார அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் என தினமும் ஒரு நிகழ்ச்சி என கோடைவிழா நடைபெற்றது. இதில் சுற்றுலாபயணிகள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

மே மாதத்தின் முதல் பாதியில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. மே 15ம் தேதிக்கு பிறகு கோடை மழை துவங்கி பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் பெய்ததால் வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. தொடர் மழைகாரணமாகவும், வெயிலின் தாக்கம் குறைந்ததாலும் கோடைவிழா துவங்கியது முதல் சுற்றுலாபயணிகள் வருகை வழக்கத்தைவிட சற்று குறைந்தே காணப்பட்டது.

கோடைவிழாவின் நிறைவு நிகழ்ச்சிகள் பிரையண்ட் பூங்காவில் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் காயத்திரி, பிரையண்ட் பூங்கா மேலாளர் சிவபாலன், சுற்றுலா அலுவலர் கோவிந்தராஜன், உதவி சுற்றுலா அலுவலர் சுதா, கொடைக்கானல் டி.எஸ்.பி., மதுமதி ஆகியோர் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

விடுமுறை தினம் என்பதாலும், மலர் கண்காட்சி நிறைவு நாள் என்பதாலும் சுற்றுலாபயணிகள் வருகை அதிகம் காணப்பட்டது. இதனால் கொடைக்கானலின் நுழைவுபகுதியான வெள்ளிநீர்வீழ்ச்சி, மூஞ்சிக்கல் பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நீண்டவரிசையில் காத்திருந்து வாகனங்கள் கடந்து சென்றன. சுற்றுலாத்தலங்களிலும் சுற்றுலாபயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

SCROLL FOR NEXT