கோப்புப் படம் 
சுற்றுலா

கனமழை எச்சரிக்கை; நீலகிரி மாவட்டத்துக்கு பாதுகாப்புடன் வர வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

உதகை: கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புடன் வர வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல்அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் மு.அருணா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் வரும் 18, 19, 20-ம் தேதிகளில் கனமழைபெய்வதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம்விடுத்துள்ளது. கனமழையின்போது மாவட்டத்தில் உள்ள அபாயகரமான பகுதிகள், மழைநீர் பாதிப்புகள் ஏற்பட உள்ள பகுதிகள், சாலைகள் சேதமடைய வாய்ப்புள்ள பகுதிகள் குறித்தும், பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல் தற்காத்துக் கொள்வது குறித்தும், பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக நிவாரணப் பணிகள் மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மாவட்டத்தில் மழை, வெள்ளப் பாதிப்புகளை எதிர்கொள்ள 3,500 முன்களப் பணியாளர்கள், 200 ஆப்தமித்ரா பணியாளர்கள், 6 பொறுப்பு அலுவலர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும், 456நிவாரண மையங்கள், தீயணைப்புத் துறை சார்பில் 25 வாகனங்கள், 100 பொக்லைன் இயந்திரங்கள், 25,000 மணல் மூட்டைகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

பள்ளமான பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளை மேடான பகுதிக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், மழை வரும்போது பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், முதியவர்கள் மற்றும் குழந்தைகளை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். மழை வெள்ளப் பாதிப்புகளை தெரிவிக்க 1077 என்ற இலவச எண்ணைப் பயன்படுத்தலாம். அதேபோல, வரும் 3 நாட்களுக்கு நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலாப் பயணிகள் தக்க பாதுகாப்புடன் வர வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மு.அருணா கூறினார்.

SCROLL FOR NEXT