புதுச்சேரி: அதிக வருவாய் ஈட்டிக் கொடுத்தும் புதுச்சேரி நோணாங்குப்பம் படகுக் குழாம் சீரமைக்கப்படாமலேயே பாழ்பட்டு வருகிறது.
புதுச்சேரி - கடலூர் சாலையில், நோணாங்குப்பம் ஆறு கடலுடன் கலக்கும் இடத்தில் இயற்கையான மணல் திட்டு உள்ளது. இந்த பகுதியில் நோணாங்குப்பம் படகுக் குழாம் கடந்த 1990-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. புதுச்சேரி நகரிலிருந்து 7 கி.மீ தொலைவில் இயற்கை எழிலுற இந்த படகுக் குழாம் அமைந்துள்ளது.
புதுச்சேரி அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்படும் இந்த படகுக் குழாம் 4 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. 'பாரடைஸ் பீச்' என அழைக்கப்படும் இந்த படகுத் துறையில் ஒரு காலத்தில் ஸ்பீட் போட், மோட்டார் போட், பெடல் போட், ஃபெராரி ரைட் என பல வகையான படகுகள் இருந்தன. இங்கு சாதாரண நாட்களில் 300 லிருந்து 500 பேர் வருவார்கள்.
வார விடுமுறை நாட்களில் 3 ஆயிரம் பேர் வரை வருகின்றனர். சுற்றுலாப்பயணிகள் வருகை மூலம் லட்சக் கணக்கில் கட்டணமும் வசூலாகிறது. ஆனால், சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு நல்ல வருவாய் ஈட்டித் தரும் இப்படகு குழாமில் அடிப்படை வசதிகள் தான் இல்லை.
கோடை வெப்பத்தின் தாக்கம் தற்போது அதிகளவில் உள்ளது. குழந்தைகள் முதியோருடன் வரும் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரிக்கு நெடுநேரம் காத்திருந்து படகுகளில் பாரடைஸ் பீச் சென்றால், அங்கு வெயில் காலத்தில் ஒதுங்க நிழற்குடைகளே இல்லை. இருக்கும் நிழற்குடைகளும் கூரைகளே இல்லாமல் காட்சி தருகின்றன. கழிப்பறைகளும் முறையாக பராமரிக்கப்படாததால் அந்தப் பக்கம் எட்டிக்கூட பார்க்கமுடியாத நிலை.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சுற்றுலாப் பயணிகள், ''படகுகள் முறையாக பராமரிக்கப்படாததால் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றன. பல படகுகளை இன்ஜின் பழுதாகி ஓரங்கட்டி வைத்திருக்கிறார்கள். பேரடைஸ் பீச்சில் படகு நிறுத்துமிடத்தில் போன முறை வந்தபோதே உடைப்பு இருந்தது. அதை இன்னும் சரிசெய்யாமல் வைத்திருக்கிறார்கள். பாரடைஸ் பீச்சில் நடைபாதை வசதியும் இல்லை; விளக்கு வசதியும் இல்லை'' என்றனர்.
இது பற்றி படகு குழாம் ஊழியர்கள் தரப்பில் விசாரித்தபோது, "படகு குழாமில் தற்போது அதிகளவில் படகுகள் இயங்கவில்லை. பல படகுகள் பழுதடைந்து ஓரம் கட்டி நிறுத்தப்பட்டுள்ளது உண்மை தான். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரி வருகின்றனர். ஆனால் போதிய படகுகள் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது.
இதுகுறித்து அரசுக்கும் தெரிவித்துவிட்டோம். சின்னச் சின்னக் குறைகளை சரி செய்தாலே போதும். பயணிகள் காத்திருக்கும் நேரம் குறையும். விடுமுறை நாட்களில் பல லட்சங்கள் வருவாய் கிடைக்கிறது. அதில் ஒரு பகுதியை ஒதுக்கி, பழுதான படகுகளை சீரமைத்தாலே இன்னும் பல லட்சம் வருவாய் ஈட்டமுடியும்'' என்றனர்.