உதகை: நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது.
சமவெளிப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், இம்மாதம் தொடக்கத்திலிருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இ-பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர், கூட்டம் கணிசமாக குறைந்தது. இந்த ஆண்டு மலர் கண்காட்சியை முதல் நாளில் 14 ஆயிரம் பேர் பார்வையிட்டனர். ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியை 6 ஆயிரத்து 209 பேர் கண்டு ரசித்துள்ளனர்.
இரண்டாம் நாளான நேற்று பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நீலகிரி மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவ்வப்போது கோடை மழை பெய்கிறது. நேற்று திடீரென சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. அதை பொருட்படுத்தாமல் மலர் கண்காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மழை பெய்ததால் வெப்ப நிலை குறைந்து, சுற்றுலா பயணிகளுக்கு ஆறுதல் கிடைத்தது.