நீரின்றி வறண்டு காணப்பட்ட குற்றாலம் பிரதான அருவி. 
சுற்றுலா

குற்றாலம் அருவிகள் வறண்டன!

செய்திப்பிரிவு

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வந்தது. ஏப்ரல் மாதத்தில் வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியது. சுட்டெரிக்கும் வெயில் கொடுமையால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடந்த 2 வாரத்துக்கு முன்பு பெய்த கோடை மழையால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தது. குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து ஏற்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. கடந்த சில நாட்களாக வெயிலின் உக்கிரம் மீண்டும் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. வாட்டி வதைக்கும் வெயிலால் குற்றாலம் அருவிகள் வறண்டு காணப்படுகின்றன.

இதனால் குற்றாலம் வெறிச்சோடி கிடக்கிறது. சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். நேற்று மாலையில் மலைப்பகுதியில் பெய்த திடீர் மழையால் குற்றாலம் பிரதான அறிவியல் குறைவான அளவில் தண்ணீர் விழுந்தது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிறிய அணையான குண்டாறு அணை ஓரிரு நாட்கள் பலத்த மழை பெய்தாலே நிரம்பிவிடும்.

மாவட்டத்தில் உள்ள 5 அணைகளில் முதலில் நிரம்புவது குண்டாறு அணைதான். இதேபோல் கோடை காலத்தில் முதலில் வறண்டு போவதும் குண்டாறு அணை தான். தொடர் வெயிலால் குண்டாறு அணை வறண்டு காணப்படுகிறது. 36.10 அடி உயரம் உள்ள குண்டாறு அணையில் சுமார் 15 அடி உயரத்துக்கு சேறு தேங்கி கிடக்கிறது. இதனால் அணை வேகமாக வறண்டுவிடுகிறது. தற்போது குண்டாறு அணை வறண்டு கிடப்பதால் மழைக் காலத்தில் முழுமையாக தண்ணீரை தேக்க தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொது மக்களும் எதிர்பார்க் கின்றனர்.

SCROLL FOR NEXT