உதகை: உதகையில் 126-வது மலர்க் கண்காட்சி மே 10-ம் தேதி தொடங்கி 11 நாட்கள் நடைபெற உள்ளது.
மக்களவைத் தேர்தல் காரணமாக இந்த ஆண்டு கோடை விழாக்கள் ரத்து செய்யப்பட்டு, மலர்க் கண்காட்சி மற்றும் பழக்காட்சி மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 126-வது மலர்க்காட்சி மே 17ம்-தேதி முதல் 22-ம் தேதி வரை நடத்த முதலில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது மலர்க் கண்காட்சியை மே 10-ம் தேதி முதல் 10 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.அருணா கூறியதாவது: கோடைகாலம் தொடங்கியுள்ளதால் நீலகிரி மாவட்டத்துக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, நேற்று மட்டும் உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்கு 20,000 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.
எனவே, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், உதகையில் மலர்க் காட்சி மே 10-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையும், குன்னூர்சிம்ஸ் பூங்காவில் 64-வது பழக் காட்சி மே 24 முதல் 26 வரையும் நடைபெறும். சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். உதகை மலர்க் கண்காட்சி முதல்முறையாக 11 நாட்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.