உதகை: நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
தகிக்கும் வெப்பத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ள சுற்றுலா பயணிகள் உதகையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். மேட்டுப் பாளையத்திலி ருந்து 51 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உதகை, இந்த ஆண்டுக்கான கோடை குளு குளு சீசனில் மூழ்கியுள்ளது. உதகை தாவரவியல் பூங்காவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள மலர்க் கண்காட்சிக்காக அங்குள்ள கண்ணாடி மாளிகையில் மலர் செடிகளை அடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், முதல் முறையாக 2 அரை டன் வண்ண கூழாங்கற்களை கொண்டு வன விலங்குகளின் உருவங்களை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடல் மட்டத்திலிருந்து 2240 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள உதகை முழுவதும் குளுமையான காற்றோடு இதமான சூழல் நிலவுவதால், ஆயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால், தற்போதே உதகையில் கோடை சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. உதகையில் திரளும் சுற்றுலா பயணிகளுக்காக தாவரவியல் பூங்கா மட்டுமின்றி, ரோஜா பூங்காவிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை கட்டுப்படுத்த, நேற்று முதல் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையை ஒரு வழிப்பாதை யாக மாவட்ட நிர்வாகம் மாற்றியுள்ளது. உதகையிலிருந்து செல்லும் வாகனங்கள் அனைத்தும் கோத்தகிரி வழியாகவும், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகையை நோக்கி வரும் வாகனங்கள் குன்னூர், பர்லியாறு வழியாகவும் என ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகரித்துள்ளதால், மலைப் பாதையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
கடும் வெயில் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகளும் அவதியுற்று வருகின்றனர். இதேபோல், உள்ளூர் மக்களின் வாகனங்களும் திருப்பிவிடப்படுவதால், அவர்களும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே, உள்ளூர் மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.