மூணாறு: மக்களவைத் தேர்தல் விறுவிறுப் படைந்துள்ள நிலையில் மூணாறில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துவிட்டது. பல இடங்களில் தற்காலிக கடைகள் மூடப்பட்டுள்ளன.
தேனி மாவட்டத்துக்கு அருகில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது மூணாறு. இங்குள்ள பசுமையான தேயிலைத் தோட்டங்களும், குளிர்ந்த பருவ நிலையும் ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. குறிப்பாக கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் மூணாறு வருகின்றனர். தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஏராளமானோர் மூணாறுக்கு சுற்றுலா வருவர் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரம், அதைத் தொடர்ந்து கடந்த 19-ம் தேதி நடந்த வாக்குப் பதிவு உள்ளிட்ட காரணங்களால் மூணாறுக்கு செல்ல பலரும் ஆர்வம் காட்டவில்லை. அதேபோல், கேரளாவில் வரும் 26-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதனால் அங்கு பிரச்சாரம் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. பறக்கும் படை அதிகாரிகளின் வாகனச் சோதனை, மாநில எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் மூணாறுக்குச் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர். இதன் காரணமாக மூணாறில் இயங்கி வந்த தற்காலிகக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இது குறித்து சுற்றுலா வழிகாட்டிகள் கூறுகையில், மூணாறில் மட்டுமல்ல அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் ஏராளமான சுற்றுலா தலங்கள் உருவாகி விட்டன. இதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தற்காலிக கடைகள் திறக்கப்பட்டிருந்தன. தற்போது சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துவிட்டதால் கடைகளை மூடியுள்ளனர். கேரளாவில் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று கூறினர்.