கோவை: கோவை உக்கடம் - சுங்கம் பைபாஸ் சாலையில் வாலாங்குளம் உள்ளது. மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இக்குளத்தின் கரைப்பகுதிகளில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் பலப்படுத்தப்பட்டு, பொழுதுபோக்கு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக, மாநகராட்சி மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் வாலாங்குளத்தின் கரைப் பகுதியில் படகு இல்லம் ஏற்படுத்தப்பட்டது. இந்த படகு இல்லத்துக்கு வருபவர்களுக்கு வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை என புகார்கள் எழுந்தன. இதையடுத்து வாலாங்குளத்தின் படகு இல்லத்துக்கு தேவையான வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கான இட வசதி, கட்டமைப்பு ஆகியவற்றை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச் சந்திரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்பின் அமைச்சர் கூறியதாவது: திராவிட மாடல் ஆட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக நடத்தி வருகிறார். அதனடிப்படையில், நாட்டிலேயே உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் வருவதில் தமிழகம் முதலிடத்திலும், அயல்நாட்டு பயணிகள், உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் என இரு தரப்பையும் சேர்க்கும் போது நாம் இரண்டாம் இடத்திலும் உள்ளோம். இதை முதலிடத்துக்கு கொண்டு வர தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறோம்.
சுற்றுலாப் பயணிகள் வருகையால் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படும். அவர்களது வாழ்வாதாரம் மேம்படுவதோடு, வருவாயும் கூடும். வாலாங்குளம் படகு இல்லத்துக்கு வரும் பார்வையாளர்களின் வாகனங்களை நிறுத்த இட வசதி இல்லை. எனவே, வாகன நிறுத்துமிடம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஆய்வுக்குப் பின், விரிவான திட்ட அறிக்கை தயாரித்து பணிகள் மேற்கொள்ளப் படும்.
படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குறிச்சி குளத்தில் படகு சவாரி தொடங்குவது குறித்து ஆய்வு செய்யப்படும். வரும் தேர்தலில், நீலகிரி மக்களவைத் தொகுதியில் மீண்டும் ஆ.ராசா வெற்றி பெறுவார். இவ்வாறு அவர் கூறினார். அப்போது, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயர் ரா.வெற்றிச்செல்வன், மத்திய மண்டல தலைவர் மீனாலோகு மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.