பொள்ளாச்சி: கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் டாப் சிலிப், கவியருவி, சின்னகல்லார், பரம்பிக்குளம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. இங்கு கோவை மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் பயணிகள் வந்து செல்கின்றனர்.
தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். இதில் ஆழியாறு மற்றும் வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் பலரும், அருகே உள்ள கவியருவிக்கு சென்று குளித்து மகிழ்கின்றனர். மழைக் காலத்தில் அருவியில் தண்ணீர் அதிகளவில் வரும் போது கூட்டம் கட்டுக் கடங்காமல் இருக்கும். சில மாதங்களாக தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததுடன், சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்தது. தற்போது மழையின்றி வெயிலின் தாக்கத்தால் கவியருவியில் தண்ணீர் அளவு மிகவும் குறைந்து விட்டது.
இதனால் நேற்று முதல் கவியருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் வெளியூரில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். தடையை மீறி சுற்றுலாப் பயணிகள் அருவி பகுதிக்கு செல்வதை தடுக்க கவியருவி செல்லும் வழி அடைக்கப்பட்டதுடன், அங்கு வனத் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.