உடுமலை: திருமூர்த்தி மலையை சுற்றுலாத் தலமாக அறிவித்து, வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: உடுமலையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் தென் கயிலாயம் எனக்கூறப்படும் திருமூர்த்தி மலை அமைந்துள்ளது. 3 புறமும் மலைகள் சூழ்ந்து காணப்படும் திருமூர்த்தி அணை, அமணலிங்கேஸ்வரர் கோயில், பஞ்சலிங்க அருவி ஆகியவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன. தமிழகம் மட்டுமின்றி, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் பேர் திருமூர்த்திமலைக்கு வந்து செல்கின்றனர்.
தளி பேரூராட்சி சார்பில் திருமூர்த்தி அணையில் செயல்படுத்தப்பட்ட படகு சவாரிக்கு சுற்றுலா பயணிகளிடையே நல்ல வரவேற்பு இருந்தது. மேலும் படகு சவாரியால் அங்குள்ள மலைவாழ் மக்களுக்கும் வாழ்வாதாரம் கிடைத்தது. காலப்போக்கில் தளி பேரூராட்சியின் உதவி நிறுத்தப் பட்டதால், படகு இல்லமும் முடங்கி, மலை வாழ் மக்களின் வாழ்வாதாரமும் பறிபோனது.
ஆண்டுதோறும் ரூ.2 கோடிக்கும் மேல் கோயிலுக்கு வருவாய் கிடைத்து வரும் நிலையில், திரு மூர்த்தி மலையில் எவ்வித அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படவில்லை. பார்க்கிங் வசதி இல்லாமலேயே பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தேவையான கழிவறை, தங்கும் விடுதிகள் இங்கு இல்லை. அருவி பகுதியில் உடைந்த நிலையில் காணப்படும் இரும்புத் தடுப்புகளும், சிதிலமடைந்த பெண்கள் உடைமாற்றும் அறையும் இதுவரை புதுப்பிக்கப்படவில்லை.
சுற்றுலாத் துறை சார்பில் பலமுறை ஆய்வுகள் நடத்தப்பட்டு, அரசுக்கு அறிக்கை அனுப்பியும், இதுவரை திருமூர்த்தி மலையை சுற்றுலாத் தலமாக அறிவிப்பதற்கான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. திருமூர்த்தி மலையை சுற்றுலாத் தலமாக அறிவித்து வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இன்று ( பிப்.15 ) மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற உள்ள சுற்றுலா வளர்ச்சி தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கையை, ஆட்சியரிடம் சுற்றுலாத் துறை அதிகாரிகள் முன்வைக்க வேண்டும், என்றனர்.