சென்னை: பூத்துக்குலுங்கும் 12 லட்சம் மலர்களுடன், கலைஞர் நூற்றாண்டு மலர் கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு மலர்கண்காட்சி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள செம்மொழி பூங்காவில் நேற்று தொடங்கியது. வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை நடைபெறும் 3-வது மலர் கண்காட்சி இது. குளிர் பிரதேசங்களில் நடத்தப்படும் மலர் கண்காட்சியை சென்னையில் நடத்தினால் எப்படி இருக்கும் என்ற சென்னை மக்களின் ஏக்கத்தை போக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் இந்த மலர் கண்காட்சி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அதன்படி வரும் 20-ம் தேதி வரை கண்காட்சி நடைபெற உள்ளது. காலை 10 முதல் இரவு 7.30 மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இந்த கண்காட்சியில் ஊட்டியை போலவே பிரெஞ்சு செண்டுமல்லி, கோழி கொண்டைப்பூ, காஸ்மோஸ், ஆப்பிரிக்கா சாமந்தி, நீல டெய்சி, மடகாஸ்கர் ஆல்மண்ட், ஸ்வீட் வில்லியம், வாடாமல்லி, நித்திய கல்யாணி, சங்குப்பூ, ரோஜா, ஆரம் லில்லி உள்ளிட்ட 26 மலர் வகைகள் இடம்பெற்றுள்ளன.
கிருஷ்ணகிரி, ஓசூர், மதுரை, கொடைக்கானல், கன்னியாகுமாரி ஆகிய இடங்களில் இருந்து மொத்தமாக 12 லட்சம் மலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கண்காட்சிக்கு வருகை தந்த மக்கள் நடை பாதைகளில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாம் பூச்சி, ஹார்டின் போன்ற வளைவுகளை வெகுவாக ரசித்து சென்றனர். ஆங்காங்கே நின்று செல்ஃபிகளையும் எடுத்துக் கொண்டனர்.
அதே போல குழந்தைகளை கவரும் வகையில் உருவாக்கப்பட்டிருந்த யானை, அன்னப்பறவை, கார், ஆமை, வாட்ச் உள்ளிட்ட 9 வடிவங்களும் வண்ணமயமான பூ அலங்காரத்துடன் பிரமிப்பை ஏற்படுத்தின. நுழைவு வாயில்களில் வைக்கப்பட்டிருந்த மூங்கில்களால் ஆன மரயானைகள் பிரம்மாண்டமாக காட்சியளிக்கின்றன. கண்காட்சியை பார்வையிட வரும் மக்களுக்காக உணவு அரங்குகளும், இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இசை நிகழ்ச்சி மாலை 4.30 முதல் 6 மணி வரை நடைபெறுகிறது. பார்வையாளர்கள் அமர்ந்து பார்வையிடவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மலர் கண்காட்சி குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறும்போது, “ஆண்டுதோறும் ஊட்டியில் நடைபெறும் மலர் கண்காட்சிக்கு செல்ல முடியாத சென்னை வாசிகளுக்காக, மலர் கண்காட்சியை சென்னையிலேயே ஏற்பாடு செய்திருக்கிறோம். மாலை நேரங்களில் பொழுது போக்கு அம்சங்களும் கூடுதலாக இடம் பெறும். கண்காட்சியில் 5 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ரூ.75-ம், பெரியவர்களுக்கு ரூ.150-ம் கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. இது தவிர கேமராவுக்கு என தனியாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் குளிரூட்டப் பட்ட அறையில் நடத்தப்பட்ட மலர்கண்காட்சி, இந்த முறை காலநிலைக்கு ஏற்ப வெயிலை சமாளிக்கும் வகையிலான மலர்களை கொண்டு திறந்த வெளியில் அமைக்கப்பட்டுள்ளது.” என்றார்.
இந்நிகழ்வில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தயாநிதி மாறன் எம்.பி., வேளாண்மை உற்பத்தி ஆணையர் அபூர்வா, தோட்டக் கலைத் துறை இயக்குநர் குமார வேல் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மலர் கண்காட்சிக்கு வருகை தந்திருந்த மக்கள், நுழைவு கட்டணம் கூடுதலாக இருப்பதாக தங்களது கருத்துகளை தெரிவித்தனர். குடும்பத்துடன் வரும் போது உணவு அரங்குகள், பொழுது போக்கு அம்சங்களுக்கும் கூடுதல் செலவுகள் ஏற்படும். இதனால் குடும்பமாக வருவதற்கு தயக்கம் ஏற்படும். இவற்றை கருத்தில் கொண்டு நுழைவு கட்டணமின்றி அனுமதிக்க கோரிக்கை விடுத்து சென்றனர்.