ராமேசுவரம்: பிரதமர் நரேந்திர மோடி வருகையின் பின்னணியில் தனுஷ்கோடி-தலை மன்னார் இடையே பாலம் அமைப்பது குறித்து விரைவில் ஆய்வறிக்கை தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராமேசுவரம் அருகே தனுஷ் கோடியிலிருந்து இலங்கையின் தலை மன்னார் வரை உள்ள 30 கி.மீ. தூரம் கொண்ட கடல் பகுதியில் 13 மணல் தீடைகள் உள்ளன. இதில் தனுஷ்கோடியிலிருந்து முதல் 6 தீடைகள் இந்தியாவுக்கும், மீதமுள்ள 7 தீடைகள் இலங்கைக்கும் சொந்தமானவை ஆகும். இதில் 6-வது மணல் தீடை சேது சமுத்திரத் திட்டப் பணிகளுக்காக தோண்டிய போது முற்றிலும் மூழ்கி விட்டது. தனுஷ்கோடி - தலை மன்னார் இடையே பாலம் அமைப்பது தொடர்பாக 2015-ம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த பாலம் அமைக்க ரூ.22,000 கோடி நிதியை வழங்க ஆசிய வளர்ச்சி வங்கியும் முன்வந்தது. ஆனால், இந்த திட்டத்துக்கு அப்போதைய இலங்கை அரசு ஆர்வம் காட்டவில்லை. கரோனா பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு மார்ச் முதல் இலங் கையின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகித்த சுற்றுலா, தேயிலை உற்பத்தி மற்றும் ஆடை தயாரிப்பு ஆகியவை பாதிப்படைந்தன. இதனால் இலங்கை யில் கடும் பொரு ளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இலங்கையிலிருந்து தமிழகப் பகுதிகளுக்கு கப்பல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து தொடங்க முக்கியத்துவம் அளித்து வருகிறது. கடந்த ஜூலையில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்தியா வுக்கு வந்தபோது பிரதமர் நரேந்திர மோடியிடம் தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே பாலம் அமைப்பதற்கான திட்டம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி யிருந்தார்.
அண்மையில் ராமேசுவரம் வந்த பிரதமர் நரேந்திர மோடி தனுஷ் கோடிக்குச் சென்றபோது, ராமர் பாலம் இருந்ததாக நம்பப்படும் பகுதிகளை தொலைநோக்கி மூலம் பார்வையிட்டார். பிரதமர் மோடியின் தனுஷ்கோடி வருகையை தொடர்ந்து தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே பாலம் அமைக்கும் திட்டம் குறித்து ஆய்வு நடத்த மத்திய அரசு திட்ட மிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பாலம் அமைந் தால் நீண்ட கலாச்சார, வரலாற்று பாரம்பரியம் கொண்ட இந்தியா - இலங்கை இடையே பயணிகள் போக்குவரத்து, சுற்றுலா மட்டுமின்றி, வர்த்தகமும் மேம்படும்.
மேலும், ‘சிங்களத் தீவினுக் கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்’ என்று மகாகவி பாரதியார் கண்ட கனவும் நிறைவேறும். பாலம் அமைப்பது குறித்து இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கூறுகையில், தனுஷ் கோடிக்கும், தலைமன்னாருக்கும் கடலில் சாலைப் பாலம் அமைப்பது குறித்த ஆய்வுப் பணிகள் விரைவில் தொடங்கப் பட்டு அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. இந்த பாலம் அமையுமானால் இந்தியா - இலங்கை இடையிலான தொடர்புகள் மேலும் வலுப்பெறும் என்று கூறினர்.