ஈரோடு: தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக மாறியுள்ள கொடிவேரி அணைக்குச் செல்லும் சாலை குறுகலான கிராமச் சாலையாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் கொடிவேரி அணைக்கு மாற்றுப் பாதையோ, இணை சாலையோ அமைக்க வேண்டும், என கோரிக்கை எழுந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே 527 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பழமையான பாசன அணை கொடிவேரி. இந்த அணையில் இருந்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை என இரு வாய்க்கால்களில் திறக்கப்படும் நீரால், 40 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வருகிறது.
பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் கொடிவேரி தடுப்பணையில் தேக்கப்பட்டு, பாசன வாய்க்கால்களுக்கு நீர் பகிர்மானம் செய்து விட்டு, அணையில் இருந்து உபரி நீராக பவானி ஆற்றில் வழிந்தோடுகிறது. கொடிவேரி தடுப்பணையில் இருந்து விழும் உபரி நீர் நீர்வீழ்ச்சி போல இருப்பதால், ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து வருகிறது.
கொடிவேரி தடுப்பணைப் பகுதியில் படப்பிடிப்புகள் பல நடந்துள்ளதும், செலவு குறைவான நிறைவான சுற்றுலா செல்ல உகந்த இடம் என்பதாலும், ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கொடிவேரிக்கு வந்து குளித்து மகிழ்கின்றனர். தடுப்பணையில் படகு சவாரி செய்தும், பூங்காவில் பொழுதைக் கழித்தும், மீன் உணவுகளை ருசித்தும் சுற்றுலாப் பயணிகள் பொழுது போக்க பல்வேறு ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை இங்கு செய்துள்ளது.
15 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள்: ஈரோடு - சத்தியமங்கலம் சாலையில், கொடிவேரி செல்வதற்கான கிராமச்சாலை உள்ளது. இந்த சாலை மூலமே கொடிவேரி அணைக்கு சுற்றுலாப் பயணிகள் சென்று திரும்ப முடியும். பண்டிகை, விழாக்கள், விடுமுறை நாட்களில் 15 ஆயிரம் பேர் வரை கொடிவேரி தடுப்பணைக்கு சுற்றுலா வருகின்றனர்.
கார், வேன், சுற்றுலாப் பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். கொடிவேரி தடுப்பணை அருகே வாகனம் நிறுத்த இடவசதி குறைவாகவே உள்ளது. பண்டிகை மற்றும் விடுமுறைக் காலங்களில் வரக்கூடிய ஆயிரக்கணக்கான வாகனங்களை நிறுத்துமளவுக்கு வாகன நிறுத்துமிடம் இல்லை.
குறுகலான சாலையால் பாதிப்பு: மேலும், ஈரோடு - சத்தியமங்கலம் சாலையில் இருந்து கொடிவேரி செல்லும் குறுகலான கிராமச் சாலையில், எதிரெதிராக ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும் என்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதோடு, கொடிவேரி தடுப்பணைக்கு அருகே, பிரதமர் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதால், அவர்களும் இந்த சாலையை பயன்படுத்தும் நிலை உள்ளது.
எனவே, சுற்றுலாப் பயணிகள் மற்றும் கிராம மக்கள் நலன் கருதி கொடிவேரி அணைக்குச் செல்ல மாற்றுப்பாதையோ, இணை சாலையோ அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து தடப்பள்ளி- அரக்கன்கோட்டை - பவானிநதி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சுபி.தளபதி கூறியதாவது: தமிழகத்தின் தொன்மைப் பாசனமான கொடிவேரி பாசனத்துக்காக கட்டப்பட்ட தடுப்பணை, தற்போது சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டுள்ளது.
கொடிவேரி தடுப்பணைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து விட்டுச் செல்வது மகிழ்ச்சிக்குரியது. ஆனால், இப்பகுதி விவசாயிகளை பாதிக்கும் செயல்களில் அவர்கள் ஈடுபடும்போது, அதைக் கண்டிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
விவசாயிகளுக்கு பாதிப்பு: சுற்றுலா வரும் பயணிகளில் சிலர், விவசாய நிலங்களில் அமர்ந்து மது அருந்துவது, உணவு அருந்துவது, கழிவுகளை வீசிச்செல்வதால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மது பாட்டில்களை உடைத்து விளை நிலங்களில் விசுவதால், வேளாண் பணிகளை மேற்கொள்ளும் போது விவசாய தொழிலாளர்கள் காயமடைந்து வருகின்றனர். காவல்துறையினர் இவற்றை கண்காணித்து எச்சரிக்கை விடுக்க வேண்டும்.
ஈரோடு - சத்தியமங்கலம் சாலையில் இருந்து கொடிவேரி தடுப்பணைக்கு வரும் குறுகிய கிராமச் சாலையில், ஆயிரக்கணக்கான வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து வருகின்றன. அவற்றை நிறுத்த இடம் ஒதுக்கப்படாததால், வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.
இதனால், இப்பகுதி விவசாயிகள் அவசர தேவைகளுக்கு கூட பிரதான சாலைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், கொடிவேரி அணை அருகே பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 265 வீடுகள் கட்டப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளன.
இந்த பயனாளிகளும் பிரதான சாலையை அடைய, தற்போது நெருக்கடியாக உள்ள இணைப்புச் சாலையைத் தான் பயன்படுத்த வேண்டியுள்ளது. அகலம் குறைவான, தரம் குறைந்த இந்த சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும் போது பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக உள்ளூர் மக்கள், விவசாயிகளுக்கும், சுற்றுலா பயணிகளுக்கு மோதல் ஏற்பட்டு வருகிறது.
பிரச்சினைக்கு தீர்வு: இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், கொடிவேரி அணை முதல் ஈரோடு - சத்தியமங்கலம் சாலை வரை இணை சாலையோ, மாற்றுப் பாதையோ அமைக்க வேண்டியது அவசியமாகும். இதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. இதனால், ஒருவழியில் வாகனங்கள் செல்லவும், மறுவழியில் திரும்பி வரவும் வாய்ப்பு ஏற்படும்.
இது சுற்றுலாப் பயணிகள், இப்பகுதி விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். இதோடு, கொடிவேரி அணைக்கு அருகே அரசுக்கு சொந்தமான சில ஏக்கர் நிலம், தனியார் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. அதை மீட்டு, சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்துமிடமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.