மேட்டூர்: மேட்டூர் அணை பூங்காவுக்கு, தொடர் விடுமுறையை முன்னிட்டு, கடந்த 10 நாட்களில் 57 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான மேட்டூர் அணைக்கு விடுமுறை நாட்களில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில பொதுமக்களும் சுற்றுலா வந்து செல்வார்கள். அரசு விடுமுறை, முக்கியமான நாட்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து இருக்கும். கடந்த 23-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை என்பதால் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக மேட்டூருக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது.
மேட்டூர் அணையின் அழகை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள், பூங்காவில் உள்ள மீன் காட்சி சாலை, பாம்பு பண்ணை, மான் பண்ணை, முயல் பண்ணை ஆகியவற்றை பார்த்து ரசித்தனர். மேலும், குழந்தைகள் அங்குள்ள ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர். பூங்காவுக்கு வெளியே உள்ள மீன் கடைகளில் வியாபாரம் களைகட்டியது.
மேலும், காவிரி ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். தொடர் விடுமுறையையொட்டி, மேட்டூர் அணைப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அணைப் பூங்காவில் கூட்டம் அதிகமாக இருந்தால் ஊழியர்கள் ஆங்காங்கே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அதன்படி, கடந்த மாதம் 23-ம் தேதி அரையாண்டு விடுமுறை தொடங்கியதில் இருந்து நேற்று முன்தினம் வரை அணைப் பூங்கா, பவள விழா கோபுரத்துக்கு 57 ஆயிரத்து 308 சுற்றுலாப் பயணிகள் வந்தனர். இதன் மூலம் பார்வையாளர் கட்டணமாக ரூ.2 லட்சத்து 86 ஆயிரத்து 540 வசூலானது என நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.