உதகை/கொடைக்கானல்: புத்தாண்டை கொண்டாட உதகைமற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பிரதேச சுற்றுலாத் தலங்களில் பயணிகள் குவிந்துள்ளனர்.
பள்ளி அரையாண்டுத் தேர்வு, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என தொடர் விடுமுறையால், நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்கா, ரோஜாப் பூங்கா, படகு இல்லம், பைக்காரா, ஷூட்டிங் மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.
80 ஆயிரம் பயணிகள்... கிறிஸ்துமஸ் பண்டிகை முதல் நேற்று வரை 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் தாவரவியல் பூங்காவை கண்டு ரசித்துள்ளனர்.
இந்நிலையில், 2024-ம் ஆண்டு புத்தாண்டைக் கொண்டாட கேரளா,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் உதகையில் திரண்டுள்ளனர். இவர்கள்முதுமலை வழியாக உதகை வரவேண்டும் என்பதால், முதுமலையிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. வனத் துறையின் வாகன சுற்றுலா சவாரியில் இடம் கிடைக்காமல் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பு கின்றனர்.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் உதகை நகருக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க போக்குவரத்து போலீஸார் கமர்சியல் சாலையை ஒரு வழிப் பாதையாக மாற்றியுள்ளனர்.
இதேபோல, குன்னூரில் சிம்ஸ்பூங்கா, காட்டேரி பூங்கா, லாம்ஸ்ராக், டால்பின்நோஸ் உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடும் குளிரிலும்... கொடைக்கானலில் நேற்று பகலில் இயற்கை எழிலைக் கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள், நள்ளிரவில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாட நேற்று காலை முதலே தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கார்களில் சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கினர்.
இதனால், தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பின. சில தங்கும் விடுதிகளில் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மோயர் சதுக்கம், குணா குகை, தூண் பாறை, பைன் மரக்காடுகள், பிரையன்ட் பூங்கா மற்றும் ரோஜா தோட்டத்தில் நேற்று பகல் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் காணப்பட்டனர். ஏரியில் படகு சவாரி, ஏரிச் சாலையில் குதிரை சவாரி செய்தும், சைக்கிள் ஓட்டியும் மகிழ்ந்தனர்.
இரவில் குறைந்தபட்சமாக வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸ் நிலவியது. கடும் குளிரையும் பொருட்படுத்தாது நள்ளிரவில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் ஈடுபட்டனர்.
அதிகாலை 12 மணியிலிருந்து ஒரு மணி நேரத்துக்குள் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என மாவட்டகாவல் துறை அறிவுறுத்தியிருந்தது. இதைக் கண்காணிக்க கொடைக் கானல் நகரின் பல்வேறு இடங்களில் போலீஸார் ரோந்து சென்றனர்.