உதகை: நவீன நீலகிரியின் நிறுவனர் ஜான் சலீவன் கட்டமைத்த உதகை ஏரியின் பணிகள், 200 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. 1823 ஜனவரி மாதம் ‘அழகுடன் அழகை இணைக்கும்’ பணி தொடங்கப்பட்டு, 1825 ஜூன்-ஜூலையில் நிறைவடைந்தது. சலீவன் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட்டு, வேலூரை சேர்ந்த ‘சிறப்புத்தொட்டி தோண்டுபவர்களால்’ பணி மேற்கொள்ளப்பட்டது. ஆரம்பத்தில், தொட்டபெட்டா மலை சரிவுகளில் இருந்து கல்லட்டி பள்ளத்தாக்கை நோக்கி காட்டாறு ஓடிக்கொண்டிருந்தது. சேரிங்கிராஸ் முதல் தற்போது படகு இல்லமாக உள்ள இடம் வரை அகலமாக ஓடிக்கொண்டிருந்ததால், ஃபர்ன்ஹில் போன்ற பகுதிகளுக்கு செல்ல மக்கள் ஆற்றை கடக்க வேண்டியிருந்தது. ஆற்றை கடக்க சிரமமாக இருந்ததால், படகு பயன்படுத்த முடியுமா என ஜான் சலீவன் எண்ணினார்.
தாழ்வான பகுதியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றில் படகு விட முடியாத நிலையில், இந்த ஆற்றை மறித்து ஏரியாக மாற்ற திட்டமிட்டார். ஏரியின் நடுவே மண்ணைக் கொண்டு ஒரு பெரியதடுப்பை ஏற்படுத்தினார். இந்ததடுப்பணையின் இரு புறங்களிலும் வில்லோ மரங்கள் நடவு செய்யப்பட்டதால், இப்பகுதி ‘வில்லோபண்ட்’ என அழைக்கப்பட்டது. இந்த சாலை தற்போது வில்லோபண்ட் சாலை என்றழைக்கப்படுகிறது. இரண்டாண்டு கட்டுமானத்துக்கு பின் சேரிங்கிராஸ் முதல் காந்தல் வரை 2 கி.மீ.தூரத்துக்கு ஒரு பெரிய ஏரி உருவானது. இந்த ஏரியில் படகுகளை கொண்டு மக்கள் கரையை கடந்தனர். காலப்போக்கில் ஏரியில் தண்ணீர் குறைந்து, சேரிங்கிராஸ் பகுதியில் முதலில் கட்டிடங்கள் உருவாகின. மக்கள்தொகை பெருக்கம், விவசாயத்துக்கு தண்ணீர் தேவை அதிகரித்ததால் மக்கள் ஆற்றில் தண்ணீர் எடுத்தனர். தொடர்ந்து ஏரி சுருங்கி, தற்போது 65 ஏக்கர் பரப்பளவில் படகு இல்லமாக மாறி நிற்கிறது.
முக்கிய நோக்கம்: ஆனால், ஏரி உருவாக்கத்தின் முக்கிய நோக்கம் மிகவும் அற்புதமானது என்கிறார் நீலகிரி ஆவண காப்பக இயக்குநர் டி.வேணுகோபால். இதுதொடர்பாக அவர் கூறும்போது,‘‘வறட்சி காலத்தில் 200 மைல் தொலைவில் உள்ள கரூர், ஈரோடு ஆகிய பகுதிகளுக்கு பாசனம் செய்வதற்காக, ஏரியில் போதுமான தண்ணீரை சேமித்து வைக்க சலீவன் விரும்பினார். இருப்பினும், மிகப் பெரிய செலவு மற்றும் நிதி நிலையை கருத்தில்கொண்டு, சலீவனின் முன்மொழிவை கவுன்சில் கவர்னர் நிராகரித்தார். சலீவன் தனது பிரம்மாண்ட திட்டத்துக்காக சமர்ப்பித்த மதிப்பீடு ரூ.2000. கடந்த 1830-ம் ஆண்டில் பலத்த மழை காரணமாக ஏரி உடைந்து பெரும்பாலான நீர் வெளியேறியது.
உடைந்த ஏரியை மீட்டெடுக்கும்போது, 1831-ல் வில்லோ பண்ட் (தற்போதைய பிரதான பேருந்து நிலையம்) வரப்பு கட்டப்பட்டது. மீண்டும் கசிவு ஏற்பட்டு, 1846-ல் கிட்டத்தட்ட உடைந்துவிட்டது. இருப்பினும், 1852-ல் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டு ஏரி முற்றிலும் வறண்டுவிட்டது. அன்றிலிருந்து இன்று வரை எந்தவித அசம்பாவிதமும் இன்றி ஏரி உயிர் பெற்று வருகிறது. 1897-ம் ஆண்டின்போது, ஏரியின் மேல் பாதி குதிரை பந்தய மைதானமாக மாற்றப்பட்டது. 1851-ம் ஆண்டு வரை உதகையில் பூர்வீக மக்களில் பெரும் பகுதியினர் ஏரி நீரை குடிநீர் தேவைக்காக பயன்படுத்தினர்.
அதன்பிறகு சாக்கடை நீர் மற்றும் களைகள் நிறைந்து ஏரிக்கு நிரந்தர பிரச்சினையாக மாறியது. உதகை ஏரி பல மறக்க முடியாத திரைப்படங் களில் இடம்பெற்றுள்ளது. மேலும், பல ஆண்டுகளாக லட்சக்கணக்கான பார்வையாளர்களை உற்சாகப்படுத்தி வருகிறது’’ என்றார். ஆங்கிலேயர்கள் காலத்துக்கு பின், இந்த ஏரியில் மீன் பிடிப்பதை மக்கள் வாடிக்கையாக கொண்டிருந்தனர். 1973-ம் ஆண்டு இந்த ஏரியை சுற்றுலா துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. சுற்றுலா பயணிகளுக்கான படகு சவாரி தொடங்கப்பட்டது. தற்போது மோட்டார் படகுகள், துடுப்பு படகுகள், மிதி படகுகள் ஆகியவை இயக்கப்படுகின்றன.
கோடை சீசனின்போது படகு போட்டிகள் மற்றும் படகு அலங்கார போட்டிகள் நடத்தப்படுகின்றன. உதகையிலுள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் உதகை ஏரியும் நீங்கா இடம் பெற்றுவிட்டது. நன்னீராக இருந்த ஏரியின் நீரில் படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் விளையாடி வந்தனர். காலப்போக்கில் உதகை நகரின் கழிவுநீர் தொட்டியாக இந்த ஏரி மாறியது. இதனால், ஏரி முழுவதும் ஆகாயத் தாமரை ஆக்கிரமித்து, படகு சவாரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த 2000-ம் ஆண்டு ஏரியில் ஆக்கிரமித்த ஆகாயத்தாமரையை அகற்ற, தமிழக அரசு ரூ.2.65கோடி ஒதுக்கியது.
உயிரியல் தொழில்நுட்பம்கொண்டு ஆகாயத் தாமரையின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டது. மேலும், ஏரியின் நீரை தூய்மைப்படுத்த பிராணவாயு செலுத்தப்பட்டது. ஆகாய தாமரை வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டாலும்,ஏரிக்கு வரும் கழிவுநீரை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், தற்போது உதகை ஏரி பகுதியில் பார்வையாளர்கள் மாடம், நடைபாதைகள், இருக்கைகள், மின்விளக்குகள் போன்ற வசதிகள் ரூ.5 கோடியில் ஏற்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்த அழகிய ஏரியை பாதுகாக்க ஒருங்கிணைந்த மற்றும் இடைவிடாத முயற்சிகள் தேவை.