வண்ணத்துப்பூச்சி பூங்காவில் அரிய வகை வண்ணத்துப்பூச்சிகளை பராமரிக்கும் குளிர்சாதன வசதியுடன் கூடிய உள்ளரங்கு பாதுகாப்பு மையம். | படங்கள்: ர.செல்வமுத்துகுமார் 
சுற்றுலா

ஆசியாவே வியக்கும் திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்கா!

திருச்சி: பூச்சி இனங்களிலேயே மிகவும் அழகானது வண்ணத்துப்பூச்சிகள். சூழலியல் பாதுகாப்பிலும், உணவுச்சங்கிலியை உறுதிப்படுத்துவதிலும் வண்ணத்துப்பூச்சிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆனால், நகரமயமாக்கல், விவசாய நிலங்களில் ரசாயனப் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் வண்ணத்துப்பூச்சி இனங்கள் அருகி வருகின்றன. வண்ணத்துப்பூச்சி இனங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அதன் எண்ணிக்கையை பெருக்கவும் ரூ.8 கோடி மதிப்பில், ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காவை தமிழக அரசு 2014-ம் ஆண்டு ஸ்ரீரங்கம் மேலூர் அருகே காவிரி ஆற்றின் கரையில் 27 ஏக்கர் பரப்பளவில் அமைத்தது. இது வெப்ப மண்டல வண்ணத்துப்பூச்சி காப்பகமாகவும் உள்ளது.

தமிழக அரசின் வனத் துறையின் பராமரிப்பு, மேற்பார்வையில் உள்ள இப்பூங்காவில் வண்ணத்துப்பூச்சி இனங்கள் இனப்பெருக்கம் செய்யும் தாவரங்கள், உண்ணும் தாவர வகைகள் என 300-க்கும் மேற்பட்ட தாவரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. வண்ணத்துப்பூச்சிகள் எப்படி உருவாகின்றன, மகரந்த சேர்க்கை நிகழ்தல் ஆகியவற்றை விளக்கும் ‘ஆம்பி தியேட்டர்’ உள்ளது. தவிர, இப்பூங்காவில் சிறுவர் விளையாட்டு பூங்கா, சிறு பாலங்கள், சிறுவர்களுக்கான படகுகள் இயக்கும் குளம், வெட்டுக்கிளி, பட்டாம்பூச்சிகள், வண்டுகள் மொய்க்கும் கல் மரம், நட்சத்திர வனம், ராசி வனம், புழுக்கூண்டு என பார்ப்பவர்களை வியக்க வைக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பூங்காவுக்கு பொழுது போக்குக்காகவும், ஆராய்ச்சிக்காகவும் ஆண்டுதோறும் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

வண்ணத்துப்பூச்சி பூங்காவில் சேதமடைந்து காணப்படும்
​​​​இனப்பெருக்க ஆய்வக மேற்கூரை.

இப்பூங்காவில் கடந்த 6 மாதங்களுக்கு முன் கண்டறியப்பட்ட ‘இண்டியன் டாட்லெட்’ உட்பட இதுவரை 129 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அரியவகை வண்ணத்துப்பூச்சிகளுக்காக ஒரு ஏக்கர் பரப்பளவில் குளிர்சாதன வசதிகளுடன் உள்ளரங்கு பாதுகாப்பு மையம் வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. இங்கு வண்ணத்துப்பூச்சிகள் நவீன தொழில்நுட்ப முறையிலும் இயற்கை முறையிலும் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. அரிய வகை வண்ணத்துப்பூச்சிகள் இனப்பெருக்கம் செய்யும் ஆடு தின்னா பாலை, கெப்பாரிஸ் போன்ற தாவரங்கள் நட்டு பராமரிக்கப்படுகின்றன. இதுதவிர இனப்பெருக்க ஆய்வகமும் உள்ளது.

வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைத்து 10 ஆண்டுகளை நெருங்கும் வேளையில், தாவரங்கள், மரங்கள் அழகாக பராமரிக்கப்பட்டு பார்க்க ரம்மியமாக உள்ளது. ஆனால், உள்ளரங்கு பாதுகாப்பு மையம், இனப்பெருக்க ஆய்வகம் ஆகியவற்றின் மேற்கூரைகள் வெயில், மழையால் சேதமாகி கிடக்கின்றன. மையத்தில் உள்ள குளிர்சாதனங்கள் மற்றும் குளிர்ந்த காற்றை கொண்டு செல்லும் குழாய்கள் சேதமடைந்துள்ளன. இதையடுத்து, இவற்றை சீரமைக்கவும், பூங்கா ஆண்டு பராமரிப்பு மற்றும் கழிப்பறை, குடிநீர் வசதி, புதிய வகை தாவரம் வளர்க்க, சிறுவர் பூங்காவை கல்லூரி மாணவர்கள் வரை பயன்படுத்தும் வகையில் மேம்படுத்துதல் போன்றவற்றுக்காகவும் ரூ.4 கோடி நிதி ஒதுக்கக் கோரி, திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண், தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ் மூலம் கடந்த 5 மாதங்களுக்கு முன் தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ள நிலையில், சில நாட்களில் ரூ.4 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நிதி ஒதுக்கும்பட்சத்தில் வண்ணத்துப்பூச்சி பூங்கா மேலும் புதுப்பொலிவுபெறும்.

வண்ணத்துப்பூச்சி பூங்காவின் உள்ளரங்கு பாதுகாப்பு
மையத்தின் உள்ளே சேதமடைந்து கிடக்கும்
‘டூம்’ பகுதிக்கு செல்லும் படிக்கட்டு
மற்றும் மேற்பரப்பு.

‘வருகை அதிகரிக்கும்’ - திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண் கூறியது: சராசரியாக நாள் ஒன்றுக்கு 500 பேரும், சனி, ஞாயிறு, அரசு விடுமுறை நாட்களில் 1,500 முதல் 2,000 பேர் வரை பார்வையாளர்கள் வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு வந்து செல்கின்றனர். தவிர, மாதத்தில் 50-க்கும் மேற்பட்டோர் திருமணம், பிறந்தநாள் போன்ற விசேஷ தினங்களில் இங்கு வந்து ஃபோட்டோஷூட் நடத்துகின்றனர். பூங்கா பராமரிப்பு, மேம்பாட்டுக்காக ரூ.4 கோடி நிதி அரசிடம் கோரப்பட்டுள்ளது. அரசு விரைவில் நிதி ஒதுக்கும் என எதிர்பார்க்கிறோம். நிதி வந்ததும் உள்ளரங்கு பாதுகாப்பு மையம், இனப்பெருக்க ஆய்வகம் ஆகியவை சீரமைக்கப்படும். பூங்காவில் தேவையான மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் புதிய வகை வண்ணத்துப்பூச்சிகள் வருகை அதிகரிக்கும். பார்வையாளர்களுக்கும் கூடுதல் பொழுது போக்கு அம்சங்கள் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT