குன்னூர்: மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக பரவலாக கனமழை பெய்து வந்தது. இதனால், மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை மலை ரயில் பாதையில் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு வந்தது. மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே மழை, மண் சரிவு காரணத்தால் கடந்த மாதம் 3-ம் தேதி முதல் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு, கடந்த 19-ம் தேதி தான் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. இந்நிலையில், அடுத்த நாளே மண் சரிவு மற்றும் காலநிலை காரணமாக மலை ரயில் சேவை மீண்டும் ரத்து செய்யப்பட்டிருந்தது.
மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே பல இடங்களில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டதால், அவற்றை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். காலநிலையால் சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டதால், மலை ரயில் சேவை நவம்பர் 30-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து, மீண்டும் மலை ரயில் சேவை நேற்று தொடங்கியது. மேட்டுப்பாளையத்திலிருந்து நேற்று காலை 7.10 மணிக்கு புறப்பட்ட மலை ரயில், காலை 10 மணி அளவில் குன்னூர் வந்தடைந்தது. மலை ரயிலில் இருந்து இயற்கை காட்சிகளை ரசித்தவாறு சுற்றுலா பயணிகள் பயணம் செய்தனர். மேலும், மலை ரயில் முன்பு நின்று செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். சுமார் ஒரு மாதத்துக்கு பின்னர் மீண்டும் மலை ரயில் இயக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.