சுற்றுலா

கோவை - உக்கடம் பெரியகுளத்தில் பார்வையாளர்களை கவரும் இரும்பு பறவைகள்

டி.ஜி.ரகுபதி

கோவை: கோவை உக்கடம் பெரியகுளத்தின் கரைப்பகுதியில், பார்வையாளர்களை கவரும் வகையில், இரும்புக் கழிவுகளால் பறவைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உக்கடத்தில் பெரியகுளம், சுங்கம் பைபாஸ் சாலையில் வாலாங்குளம், சிங்காநல்லூர் குளம், செல்வபுரத்தில் செல்வ சிந்தாமணி குளம், ஆர்.எஸ்.புரத்தில் முத்தண்ணன் குளம் மற்றும் குறிச்சிக் குளம் உள்ளிட்ட 9 குளங்கள் உள்ளன. இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மாநகரில் உள்ள குளங்கள் மேம்படுத்தப்பட்டன. குளங்களின் கரைப் பகுதிகளில் நடைபாதை, சைக்கிள் பாதை, படகுசவாரி, ‘ஐ லவ் கோவை’ என்ற வாசகம் அமைத்தல் மற்றும் பொழுதுபோக்கு கட்டமைப்புகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டன.

பொதுமக்களை கவரும் வகையில் உக்கடம் பெரியகுளத்தில் மேற்கு கரை பகுதியில் ‘ஜிப் லைன் ஹேங்கிங்’ (தொங்கியபடி செல்லுதல்), ‘ஜிப் லைன் சைக்கிளிங்’ (தொங்கியபடி சைக்கிளில் செல்லுதல்) ஆகிய இரு சாகஸ விளையாட்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, 30 அடி உயரத்தில்கம்பியில் தொங்கியபடி ஒருமுனையில் இருந்து மறுமுனைக்கு செல்லலாம். மேலும், திருவள்ளுவர் சிலை, தமிழர் பண்பாட்டு மரபுகளை வெளிப்படுத்தும் வகையிலான சிலைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மாநகராட்சி நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பழையஇரும்புக் கழிவுகளைக் கொண்டு பெரியகுளத்தின் கரைப்பகுதியில் பறவைகள் உருவம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கோவை மாநகரில் தினமும் 1,100 டன் அளவுக்கு குப்பை சேகரிக்கப்படுகிறது. இவை வெள்ளலூர்குப்பைக்கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு கொட்டப்படுகிறது. 650ஏக்கர் பரப்பளவில் காணப்படும் வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் 250 ஏக்கர் பரப்பளவில் குப்பை கொட்டப்பட்டுள்ளது. இங்கு கொட்டப்பட்டுள்ள தரம் பிரிக்கப்படாத கலப்புக்குப்பையை பயோ மைனிங் முறையில் தரம் பிரித்து அழிக்கும் பணி தொழிலாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இங்கு ஏராளமான இரும்புக் கழிவுகள் சேகரமாகின்றன. இந்தஇரும்புக் கழிவுகளைக் கொண்டும், மாநகராட்சியின் வாகன பணிமனைகள்உள்ளிட்ட இடங்களில் சேகரமாகும் பழைய இரும்புக்கழிவுகளைக் கொண்டும், பொதுமக்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் ஆக்கப்பூர்வமான பொழுது போக்குகட்டமைப்புகள் ஏற்படுத்த முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, ‘வேஸ்ட் டூ வெல்த்’ என்ற திட்டத்தின் அடிப்படையில், செயின், தகடு, ராடு, பிளேடு, ஸ்பிரிங் உள்ளிட்ட பல்வேறு வகையான இரும்புக் கழிவுகளை கொண்டு அதிகளவில் மக்கள் வந்து செல்லும் குளங்களில்ஒன்றான பெரியகுளத்தின் கரைப் பகுதியில், பறவைகளின் உருவத்தை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

இங்கு பெலிக்கன் பறவை, நாரைக்கொக்கு, கழுகுஆகிய மூன்று பறவைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.தரையில் சிமென்ட் மேடை அமைக்கப்பட்டு, அதன் மீது இப்பறவைகள் தனித்தனியாக நின்று காட்சியளிக்கும்வகையில்உருவாக்கப்பட்டு வருகின்றன. இதில், நாரைக் கொக்கு 7 அடி நீளம், 3 அடி அகலம், 5 அடி உயரத்தில்அமைக்கப்படுகிறது. பெலிக்கன் பறவை 5.45 அடி உயரம், 5 அடி நீளம் 3 அடி அகலத்திலும், கழுகு 5 அடி உயரம், 8 அடிநீளம், 3 அடி அகலத்திலும் அமைக்கப்படுகின்றன. இந்த இரும்பு பறவைகள் விரைவில் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளன. இதற்கு முன்னர், இரும்புக் கழிவுகளால் கிராம போன், பெரிய டெலிபோன், கார் உள்ளிட்டவை பெரியகுளத்தின் கரைப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்

SCROLL FOR NEXT