சென்னை: இந்திய ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐஆர்சிடிசி சார்பில், பல்வேறு சிறப்புச் சுற்றுலா ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அந்த வகையில், சென்னையிலிருந்து ஷில்லாங், கேங்டாக், டார்ஜிலிங் ஆகிய முக்கிய இடங்களுக்கு விமானம் மூலமாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து அசாம், மேகாலயாவுக்கு நவ.25-ம் தேதி சிறப்பு விமானம் புறப்படுகிறது. ஷில்லாங், சிரபுஞ்சி, காமாக்யா, குவஹாட்டி மற்றும் காஜிரங்கா ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். 7 நாட்கள் பயணத்துக்கான கட்டணம் ரூ.47,500.
சென்னையிலிருந்து டிச.1-ம் தேதி மற்றொரு விமான சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சிக்கிம் மாநிலம் கேங்டாக், மேற்கு வங்கத்தில் உள்ள டார்ஜிலிங், கலிம்பாங் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். 7 நாட்களுக்குக் கட்டணம் ரூ.53,800. இந்த சுற்றுலாவில் விமானக் கட்டணம், உள்ளூர் போக்குவரத்து, தங்கும் வசதி, உணவு, சுற்றுலா மேலாளர், பயணக் காப்பீடு ஆகியவை அடங்கும். இது தொடர்பான மேலும் விவரங்களை அறியவும், முன்பதிவு செய்யவும் 9003140682, 8287931977 ஆகிய கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஐஆர்சிடிசி செய்திக்குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.