கொடைக்கானல் தூண்பாறை அருகே யானை சிற்பங்கள் முன் புகைப்படம் எடுத்துக்கொண்ட வெளிமாநில சுற்றுலா பயணிகள். 
சுற்றுலா

கொடைக்கானலுக்கு வெளி மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

செய்திப்பிரிவு

கொடைக்கானல்: கொடைக்கானலில் ப‌னி மூட்ட‌த்துட‌ன் கூடிய‌ குளுமையான கால நிலையை வெளி மாநில சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்தனர்.

மழைக் காலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருவதை பெரும்பாலும் தவிர்ப்பர். ஆனால் கேரளம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநில சுற்றுலா பயணிகள் மழை, பனி மூட்டம் ஆகிய காலநிலையை ரசிக்க அதிக அளவில் கொடைக்கானலுக்கு வருகை தருவர். தற்போது தொடர் மழை காரணமாக கொடைக்கானலில் பனி மூட்டத்துடன் கூடிய ரம்மியமான காலநிலை நிலவுகிறது.

இதை அனுபவிக்க கேரளம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநில சுற்றுலா பயணிகள் வார விடுமுறை தினங்களான கடந்த 2 நாட்களாக அதிக அளவில் வருகை தந்தனர். நேற்று காலை முதலே கொடைக்கானலில் பனி மூட்டம் நிலவியது. மோயர் சதுக்கம், பைன் மர காடுகள், தூண் பாறை, குணா குகை உள்ளிட்ட பகுதிகளில் மேகக் கூட்டம் இறங்கி வந்து சுற்றுலா பயணிகளை தழுவிச் சென்றது.

பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்காவை சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ந்தனர். ஏரியில் படகு சவாரி செய்தனர். கொடைக்கானலில் நேற்று அதிக பட்சமாக 18 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக இரவில் 13 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவியது.

SCROLL FOR NEXT