கோவில்பட்டி: கழுகுமலையில் உள்ள கழுகாசலமூர்த்தி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலை மீது சமணப்பள்ளி மற்றும் வெட்டுவான் கோயிலும் அமைந்துள்ளது. வரலாற்று சின்னங்களாக உள்ள இவற்றைவெளிநாட்டினரும் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.
மலைமீதுள்ள சமணர் சிற்பங்கள், மலை உச்சியில் உள்ள பிள்ளையார் கோயில் ஆகியவையும் சுற்றுலாபயணிகளை ஈர்க்கச் செய்யும்.கழுகுமலையில் உள்ள மலைதமிழக அரசின் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்பட்ட மரபு சின்னமாக உள்ளது. அந்த துறை சார்பில் அங்கு ஒரு காவலாளி நியமிக்கப்பட்டுள்ளார். கழுகுமலையை புராதன நகரமாக கடந்த 15.7.2014 அன்று சட்டப்பேரவையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கழுமலையில் தற்போது குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளது. கழுகுமலை மலைப்பகுதி, அரண்மனை வாசல் தெரு, வட்டத் தெரு, அண்ணா புதுத்தெரு, கோயில் வாசல் பகுதிகளில் திரியும் குரங்குகள், அங்கு வரும் பொதுமக்கள் கைகளில் உள்ள பொருட்களை பறிக்கின்றன. மேலும்,வீடுகளுக்கு வெளியே காய வைக்கப்படும் உணவு பொருட்களை எடுத்துச் சென்றுவிடுகின்றன.
குரங்குகளை விரட்ட முயற்சிக்கும் போது அவை மக்களை தாக்குகின்றன. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மலையில் உள்ள வெட்டுவான் கோயில், சமணர் சிற்பங்களை காண வரும் சுற்றுலா பயணிகளையும் குரங்குகள் அச்சுறுத்தி வருகின்றன. எனவே, குரங்குகளை பிடித்து அடர்ந்த வனத்துக்குள் கொண்டு விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்