திருச்சி: திருச்சி மாவட்டம் பச்சமலையை சுற்றுலா தலமாக மேம்படுத்துவதுடன், அங்குள்ள மங்களம் அருவியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம் பச்சமலையில் கோடை காலத்திலும் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவுவதால், திருச்சி மட்டுமின்றி பிறமாவட்டங்களில் இருந்தும் மக்கள் குடும்பம், குடும்பமாக வந்து செல்கின்றனர்.
இந்த பகுதியை மேம்படுத்தி சுற்றுலா தலமாக அறிவிப்பதுடன், இங்குள்ள மங்களம் மற்றும் கோரையாறு அருவிகளில் தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு அம்சங்களை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து பச்சமலையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் புஷ்பராஜ் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: மங்களம் அருவிக்கு செல்லும் பாதை, அதைச் சுற்றியுள்ள இடம் சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியத்துக்கு உட்பட்டது. ஆனால், இதைப் பராமரிக்கும் பொறுப்பு திருச்சி மாவட்டம் துறையூர் வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. 2 மாவட்ட எல்லை பிரச்சினை காரணமாக இந்த அருவியை மேம்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. எனவே இந்த அருவி உள்ள பகுதியை திருச்சி மாவட்டத்துடன் இணைத்துவிட்டால் அதை மேம்படுத்துவது சுலபமாக இருக்கும் என்றார்.
புத்தனாம்பட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் கூறியதாவது: மங்களம் அருவிக்கு செல்லும் மண் சாலை, கெங்கவல்லி ஒன்றியம் சார்பில் அண்மையில் ரூ.1.63 கோடி மதிப்பில் தார் சாலையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிப்பதற்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இங்கு வனத்துறை சார்பில், குளிப்பதற்கு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.20, சிறுவர்களுக்கு ரூ.10 வசூலிக்கப்படுகிறது. ஆனால், எவ்வித அடிப்படை வசதிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லை. கடந்த சில மாதங்களில் அருவியில் குளித்த 3 பேர் தண்ணீரில் மூழ்கியும், கீழே விழுந்தும் உயிரிழந்துள்ளனர்.
இந்த அருவிக்கு செல்லும் படிக்கட்டுகளின் பக்கவாட்டில் பாதுகாப்பு கம்பிகள் அமைக்க வேண்டும். அருவியில் தண்ணீர் கொட்டும் இடத்தில் கூர்மையான கருங்கற்கள் பரவலாக உள்ளன. இவற்றை சிமென்ட் கலவைகள் கொண்டு சீரமைக்க வேண்டும். அங்கு குளிப்பவர்கள் வழுக்கி விழாமல் இருக்க பாதுகாப்பு கம்பிகள் அமைக்க வேண்டும். மேலும் பெண்கள் உடைமாற்றும் அறை, கதவு, மேற்கூரை இல்லாமல் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. எனவே, அதை சீரமைக்க வேண்டும். இதேபோல, பச்சமலையின் கிழக்குப் பகுதியில் உள்ள கோரையாறு அருவிக்கு செல்ல சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
மேலும், பச்சமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பயனுள்ள வகையில் பொழுதுபோக்கும்விதமாக தாவரவியல் பூங்கா, தொலைநோக்கி காட்சிக்கூடம், மலையேற்ற பாதை உள்ளிட்டவற்றையும் அமைக்க வேண்டும் என்றார்.
இது குறித்து திருச்சி மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி கூறியது: இந்தப் பகுதிக்கு தேவையான வசதிகளை திருச்சி, சேலம் மாவட்ட நிர்வாகம் சேர்ந்து செய்ய வேண்டி உள்ளது. இதில், பச்சமலையில் சுற்றுலா பயணிகளுக்கு வேண்டிய வசதிகளை ஏற்படுத்த திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். முதல்கட்டமாக சோபனபுரத்திலிருந்து மலை உச்சிவரை தரமான தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. கோரையாறு அருவி அமைவிடம் முழுவதும் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளதால் அங்கு சாலை வசதி உட்பட பல்வேறு வசதிகள் செய்வதற்கான திட்ட அறிக்கை திருச்சி மாவட்ட சுற்றுலாத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.